வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம், புத்தளம் – வெளிவட்ட வீதி, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயில்
புத்தளம் நகரினிலே கோயில் கொண்ட திருமகளே
புனிதம் நிறை நல்வாழ்வைத் தந்தெமக்கு காப்பளிப்பாய்
பதற்றமில்லா சூழ்நிலையில் நாம்வாழ வழியைச் செய்வாய்
வெளிவட்ட வீதியிலே அமர்ந்தருளும் எங்கள் முத்துமாரியம்மா
தூயமனம் கொண்டோர் தம் உள்ளங்களில் உறைகின்ற திருமகளே
தூய்மை நிறை நல்வாழ்வைத் தந்தெமக்குக் காப்பளிப்பாய்
தெளிவான சூழ்நிலையில் நாம் வாழ வழியைச் செய்வாய்
வெளிவட்ட வீதியிலே அமர்ந்தருளும் எங்கள் முத்துமாரியம்மா
வெற்றிகளைத் தந்தென்றும் உயர்வு தரும் திருமகளே
வீரம் நிறை நல்வாழ்வைத் தந்தெமக்குக் காப்பளிப்பாய்
வெறுப்பில்லா சூழ்நிலையில் நாம்வாழ வழியைச் செய்வாய்
வெளிவட்ட வீதியிலே அமர்ந்தருளும் எங்கள் முத்துமாரியம்மா
குறையில்லா பெருவாழ்வை எமக்கருளும் திருமகளே
குற்றமில்லா நல்வாழ்வைத் தந்தெமக்குக் காப்பளிப்பாய்
குவலயத்தில் தலைநிமிர்ந்து நாம்வாழ வழியைச் செய்வாய்
வெளிவட்ட வீதியிலே அமர்ந்தருளும் எங்கள் முத்துமாரியம்மா
நெஞ்சினிலே உறைந்திருந்து நிம்மதியைத் தரும் திருமகளே
நீதி நெறி பிறழாத நல்வாழ்வைத் தந்தெமக்குக் காப்பளிப்பாய்
நிம்மதியை நிரந்தரமாய் பெற்று நாம் வாழ வழியைச் செய்வாய்
வெளிவட்ட வீதியிலே அமர்ந்தருளும் எங்கள் முத்துமாரியம்மா
தன்மானம் சிதறாமல் வாழச் செய்யும் திருமகளே
தொல்லையில்லா நல்வாழ்வைத் தந்தெமக்குக் காப்பளிப்பாய்
துணிவு கொண்ட நல்வாழ்வைப் பெற்று நாம் வாழ வழியைச் செய்வாய்
வெளிவட்ட வீதியிலே அமர்ந்தருளும் எங்கள் முத்துமாரியம்மா.
ஆக்கம்- த மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.