கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம் – திருகோணமலை நகர் அருள்மிகு சனீஸ்வரப் பெருமான் திருக்கோயில்
நம்பித் தொழும் அடியவர்கள் நலன் காக்கும் ஈஸ்வரனே
நாடிவரும் எங்களது நலன் காத்துவிட்டிடைய்யா
நிம்மதியை நாடியுந்தன் அடி பணியும் எங்களுக்கு
அருளளித்து அரவணைப்பாய் சனீஸ்வரப் பெருமானே
திருகோணமலை நகரினிலே கோயில் கொண்ட ஈஸ்வரனே
திறமைகளைத் தந்தெமது நலன் காத்து விட்டிடைய்யா
நம்பிக்கை கொண்டுனது அடி பணியும் எங்களுக்கு
அருளளித்து அரவணைப்பாய் சனீஸ்வரப் பெருமானே
நவக்கிரக நாயகரில் ஒருவராய் வீற்றிருக்கும் ஈஸ்வரனே
நிலைகுலையா நிம்மதிதந்தெமது நலன் காத்து விட்டிடைய்யா
மனவலிமை நாடியுந்தன் அடி பணியும் எங்களுக்கு
அருளளித்து அரவணைப்பாய் சனீஸ்வரப் பெருமானே
நீதி நெறி நின்றருளும் நாயகனே ஈஸ்வரனே
நித்தம் உன்னருள் தந்து எம் வாழ்வைக் காத்து விட்டிடைய்யா
நிறைவான மகிழ்வு நாடியுந்தன் அடி பணியும் எங்களுக்கு
அருளளித்து அரவணைப்பாய் சனீஸ்வரப் பெருமானே
காகத்தை வாகனமாய்க் கொண்டருளும் ஈஸ்வரனே
கலக்கமில்லா மனம் தந்தெமது நலன் காத்து விட்டிடைய்யா
குவலயத்தில் நல்வாழ்வு நாடியுந்தன் அடி பணியும் எங்களுக்கு
அருளளித்து அரவணைப்பாய் சனீஸ்வரப் பெருமானே
சூழ்ந்து வரும் துன்பங்களைத் துடைத்தெறியும் ஈஸ்வரனே
துணிவு கொண்ட மனம் தந்தெமது நலன் காத்து விட்டிடைய்யா
தூயவள வாழ்வை நாடியுந்தன் அடி பணியும் எங்களுக்கு
அருளளித்து அரவணைப்பாய் சனீஸ்வரப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.