பதுளையில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ தனியார் பேருந்தின் ஓட்டுநர், கடுமையான மதுபோதையில் இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொணராகலையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த குறித்த பேருந்து, வீதியில் ஆபத்தான முறையில் இயக்கப்படுவதாக பதுளை தலைமையகப் பொலிஸாருக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பதுளை போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள், பதுளை – பசறை வீதியிலுள்ள உடவெல மகா வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து பேருந்தை வீதி மறிப்புச் செய்து பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது, ஓட்டுநர் கடும் மதுபோதையில் பேருந்தை இயக்கியது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் உடனடிப்படக் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தின் போது, பதுளை நகரிலுள்ள 4 முன்னணிப் பாடசாலைகளைச் சேர்ந்த 30 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 40 பேர் அப்பேருந்தில் பயணஞ்செய்துள்ளனர்.
பின்னர், பொலிஸாரின் தலையீட்டால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மாற்று வாகனங்கள் மூலம் பாதுகாப்பாகத் தத்தமது பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
