நாவலப்பிட்டி, பஸ்பாகே பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இம்புல்பிட்டி தோட்டம், கல்லாறு பகுதியைச் சேர்ந்த பத்து குடும்பங்கள் தங்களது குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு அரச அதிகாரிகளிடம் எழுத்து மூலமாகத் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்துள்ளனர்.
எனினும், சில சந்தர்ப்பங்களில் பதில் கடிதங்கள் கிடைத்த போதிலும், அவர்களின் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரமான தீர்வு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதற்கு உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அண்மையில் பெய்த கனமழையால் குடியிருப்பு பாதிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், 2026 ஆகஸ்ட் 5 ஆம் திகதி பாதிக்கப்பட்ட மக்கள் பிரதேச செயலாளரை நேரில் சந்தித்துத் தங்களது அவலநிலையை எடுத்துரைக்கச் சென்றபோது, தங்களை அலுவலகத்திலிருந்து வெளியேறுமாறு கூறப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் மனவேதனை அடைந்த மக்கள், தங்களது கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்கக் கோரி, நாவலப்பிட்டிய பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
