குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு
கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘தலைக்கு நிழல்’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ், நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பார்ம்ஸ்டன்–ரத்னகிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் எஸ். ஏ. டி. ஏ. டி. பெரேரா உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு கையளிக்கும் நிகழ்வு, கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் மத்திய மாகாணப் பணிப்பாளர் திருமதி உபேக்ஷா விஜேசிங்க தலைமையில் நடைபெற்றது.
2024ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், அமைச்சினால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக, கிராம அபிவிருத்தி பிரதேச அதிகார சபையின் வழிகாட்டுதலில் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி மற்றும் அவர்களின் உழைப்புப் பங்களிப்பின் மூலம் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக நன்கொடையாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியில் மாத்திரம் சுமார் ஒன்பது இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தின் கீழ், அரச நிதி ஒதுக்கீடுகளுடன் சமூகப் பங்களிப்பு மற்றும் உழைப்புப் பங்களிப்பையும் இணைத்து வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. வீட்டின் எஞ்சியுள்ள நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்குத் தேவையான உதவிகளை எதிர்காலத்தில் வழங்குவதற்கு கிராம அபிவிருத்தி பிரதேச அதிகார சபை நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டது.
வீடு கையளிக்கும் நிகழ்வைத் தொடர்ந்து, நுவரெலியா பிரதேச கிராம அபிவிருத்தி அதிகார சபையினால் பார்மஸ்டன்–ரத்னகிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பல வீதி அபிவிருத்தித் திட்டங்களையும் மத்திய மாகாண கிராம அபிவிருத்திப் பணிப்பாளர் திருமதி உபேக்ஷா விஜேசிங்க நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில் நுவரெலியா பிரதேச செயலாளர் லஹிரு களுகம்பிட்டிய, நுவரெலியா மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தயானி கொஹிலமுல்ல, நுவரெலியா பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கபில போபிட்டிய, பிரதேச கிராம அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துஷார ராஜபக்ஷ, முன்னாள் தலைவர் வணக்கத்திற்குரிய கொடிகமுவே தம்ம விமல தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அதிகாரிகள், நன்கொடையாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கஜரூபன் திவ்யா நுவரெலியா
