கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா வெற்றிகரமாக நிறைவுபெற்றமை பற்றி தெரிவிக்கும் ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
புதிய சமூக மதிப்பு கட்டமைப்பு முறையைக் கொண்ட தேசிய மறுமலர்ச்சி யுகத்திற்காக ஒன்றிணைவோம்
-ஜனாதிபதி
கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நான்கு மகா தேவாலயங்களின் வருடாந்த எசல பெரஹரா, பண்டைய சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து பூரணமாகவும் மிகவும் கோலாகலமாகவும் நடத்தி முடிக்கப்பட்டமை குறித்து தெரிவிக்கும் ஆவணம், தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் இன்று (28) பிற்பகல் கண்டி, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக வருகை தந்த ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, நான்கு மகா தேவாலயங்கள் மற்றும் ஏனைய தேவாலயங்களின் நிலமேமார்கள் சம்பிரதாயபூர்வமான முறையில் ஜனாதிபதியிடம் ஆவணத்தை கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி மற்றும் நிலமேமார்கள் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், பெரஹராவில் கலந்துகொண்ட கலைஞர்களுக்கு பரிசுகளும் விருதுகளும் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன.
எசல பெரஹரா நிதியத்தின் மூலம் தொலைதூர தேவாலயங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூலமாக வழங்கி வைக்கப்பட்டதுடன், மத்திய மாகாண கலாசார திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட “பூஜனிய தலதா சங்ஸ்க்ருத்திய” நூலின் முதல் பிரதியும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
மேற்படி தலதா பெரஹெரா சிறப்புற நடந்தேறியதை முன்னிட்டு மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான மகா சங்கத்தினருக்கும், தியவடன நிலமே உள்ளிட்ட நான்கு மகா தேவாலயங்களின் நிலமேமார்களுக்கும், அரச அதிகாரிகள், கலைஞர்கள் மற்றும் இதற்காக பங்களிப்புச் செய்த அனைவருக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றிகளைத் தெரிவித்தார். நாம் எதிர் பார்க்கும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்பும்போது தலதா பெரஹராவை முதன்மையாகக் கொண்டு நாடு முழுவதும் நடத்தப்படும் பெரஹரா உற்சவங்கள் மிகவும் முக்கியமானவை என்றும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
மேலும், பாரம்பரிய கலைச் சங்கங்களைப் பாதுகாப்பதுடன், அரச அனுசரணையைக் கொண்ட வலுவான கலாசார எழுச்சியொன்று நாட்டுக்குத் தேவையெனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு நாடாக நாம் முகங்கொடுத்துள்ள பாதகமான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்காக, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப புதிய மறுமலர்ச்சி யுகமொன்றைத் தொடங்குவதற்கு ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
அரசாட்சிக்கும் புனித தந்த தாதுவுக்கும் இடையே உள்ள கைவிட முடியாத பிணைப்பையும் கலாசார பாரம்பரியத்தையும் இங்கு நினைவு கூர்ந்த ஜனாதிபதி, எவரும் தங்களது அரசியல் மேடைகளுக்காகவோ அல்லது காழ்ப்புணர்வுகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவோ இந்த வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்றும், இனி ஒருபோதும் இந்நாட்டின் அரசியல் மேடைகளில் பெரஹராவை நிறுத்துவது பற்றிய கலந்துரையாடல் கூட எழுப்பப்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
எமது கலாசார பாரம்பரியம், பெருமை மற்றும் தாய் மண்ணுடன் காணப்படும் ஆழமான தொடர்பைப் பாதுகாப்பதற்கு, நிச்சயமாக போதைப்பொருள் அரக்கனுக்கெதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், செல்வாக்கையும் அதிகாரத்தையும் பெறுமதிமிக்கதாகக் கருதும் தற்காலச் சமூகத்தில் பெறுமதிகளுக்கு புதிய விளக்கம் வழங்கப்பட வேண்டும் என்றும், ஒருவரிலொருவர் கொண்டுள்ள மனிதநேயப் பிணைப்பு, கலாசார பாரம்பரியம், சரித்திரத்துடன் காணப்படும் கைவிட முடியாத பந்தம் மற்றும் அனுதாப உணர்வு ஆகியவை புதிய சமூகப் பெறுமதிகளாக மாற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில்;
ஒரு தேசமாக நமக்கு இந்தத் தருணம் மிகவும் முக்கியமான தருணமாகும். அனுராதபுர காலத்தில் கித்சிறி மன்னரின் ஆட்சிக்காலத்தில் புனிதத் தந்த தாது வந்தடைந்த நாள் முதல், இந்த ஊர்வலம் மிகுந்த பெருமையுடன் நடத்தப்பட்டு வருகிறது. இம்முறையும், இலட்சக்கணக்கான மக்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த தலதா மாளிகைத் திருவிழா பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஏனெனில் நமது பௌத்த மக்களும், தேசத்தின் கலாச்சாரமும், பெருமையும் இதில் பொதிந்துள்ளன. மேலும், தலதா மாளிகை நமது அரசின் பாரம்பரியமாகவும் மாறியுள்ளது. நமது நாடு பல்வேறு வறட்சிகளையும் பஞ்சங்களையும் சந்தித்த ஒரு நாடாகும். அந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் அக்கால மன்னர்களும் முன்னோர்களும் புனித தந்த தாதுவை பாதுகாக்கும் பொறுப்பைத் தங்கள் தோள்களில் சுமந்தனர். எனவே, அரசுக்கும் புனித தந்து தாதுவுக்கும் இடையே ஒரு பிரிக்க முடியாத பிணைப்பின் வரலாறு நமக்கு உண்டு.
இந்த தலதா ஊர்வலத்தைக் கைவிடுவது என்பது நமது தேசம் முழுவதின் மனசாட்சியையும், ஆன்மாவையும், உயிரையும் கொல்வதற்குச் சமம். கடந்த காலங்களில், அரசியல் மேடைகளில் இந்த ஊர்வலத்தைத் தடை செய்யப் போவதாகக் கூறி தவறான பேச்சுக்கள் நடைபெற்றன. இப்படியான அறிவிப்புக்களை வெளியிடுவது எவ்வளவு கொடூரமான ஓர் அரசியல் முனைப்பாகும். இது, நமது தேசத்தின் ஆன்மாவைக் கொன்று, கலாச்சாரத்தின் அடித்தளத்தை அழிக்கும் சக்திகளின் செயற்பாட்டையே காட்டுகின்றது. இந்தப் பெரஹெரா திருவிழாவை தடை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்ற தவறான அறிக்கைகள் எவ்வளவு அழிவுகரமானது. இது நமது அரசியல் மேடைகளில் விவாதத்திற்கோ அல்லது வாக்குவாதத்திற்கோ உரிய விஷயமே அல்ல. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருவிழாவும் அரசியல் மேடையும் வானமும் பூமியும் போன்றவை. இந்த உன்னதமான திருவிழா வானம் வரை பரவியிருப்பதாக கருதுவதாயின், அரசியல் மேடையோ பல ஒளி நூற்றாண்டுகள் தொலைவில் உள்ள பூமி வரை பரவியதாகவே கருதமுடியும். இதன்படி இவையிரண்டுமே அந்தளவிற்கு பாரிய இடைவெளி கொண்டவை என்றே கருத முடியும்.
எனவே, இந்த வரலாற்றுப் பாரம்பரியத்தை அரசியல் ஆதாயம் தேடுவதற்கோ அல்லது மோதலைத் தூண்டுவதற்கோ பயன்படுத்துவது யாருக்கும் நியாயமில்லை. ஆகையால், நமது நாட்டின் அரசியல் மேடையில் பெரஹெராவை நிறுத்துவது பற்றி மீண்டும் ஒருபோதும் பேச்சுக்கள் இருக்கக்கூடாது. நமது தேசத்தின் ஆன்மா கொல்லப்படுகிறது என்றோ, வரலாற்றுப் பண்பாட்டுப் பாரம்பரியம், பெருமை மற்றும் ஆன்மா அழிக்கப்படுகின்றன என்றோ எவரும் கூறக்கூடாது.
மேலும், ஏராளமான இளைஞர்கள் இந்தப் பெரஹெரா விழாவில் பங்கேற்கின்றனர். நமது சமூகத்தின் நலனை நம்மால் பாதுகாக்க முடியுமா என்ற அச்சத்தையும் சவாலையும் நாம் எதிர்கொள்கின்றோம். ஆனால், பெரஹெரா விழாவைப் பார்க்கும்போது, அந்த வரலாற்றுப் பாரம்பரியத்தின் அடித்தளத்தைப் பாதுகாத்து முன்னோக்கிச் செல்லக்கூடிய ஏராளமான இளைஞர்கள் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர்கிறோம்.
நமது அமைச்சுக்களிலும் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு பண்பாட்டுச் சங்கம் உருவாக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகின்றேன். அந்த சங்கத்தினர் நாட்டின் ஒவ்வொரு கலாசார பண்பாட்டு நிகழ்வுகளிலும் ஈடுபடுத்தப்படல் வேண்டும். பாரம்பரியக் கலைச் சங்கங்களைப் பாதுகாப்பதை போலவே, அதையும் தாண்டி அரசின் அனுசரணையை பெற்ற ஒரு வலுவான பண்பாட்டு விழிப்புணர்வும் தேவை ஆகும்.
இன்று, கிராமங்களிலும் குக்கிராமங்களிலும் பரவியுள்ள போதைப்பொருள் எனும் அரக்கனுக்கு நாம் இரையாகி வருகிறோம். இது இன்னும் இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களுக்கு தொடர்ந்தால், அனைத்து சமூக நிறுவனங்களும் வீழ்ச்சி கண்டுவிடும். அந்த வகையில் இந்த நாட்டின் சமூக அடித்தளமே அழிக்கப்படும் ஒரு சவாலை நாம் எதிர்கொள்கின்றோம். நமது கலாசாரப் பாரம்பரியம், பெருமை மற்றும் இந்த புவியுடனான நமது இயல்பான உறவைப் பாதுகாக்க நாம் நிச்சயமாக போதைப்பொருள் எனும் அரக்கனுக்கு எதிராகப் போராட வேண்டும். போதைப்பொருட்களை ஒழிப்பது மட்டுமல்லாமல், நமது இளைஞர்களையும் ஒரு புதிய மற்றும் உற்சாகமான சமூகத்திற்குள் கொண்டுவர வேண்டும். அந்த வகையில், தலதா பெரஹெராவை முன்னிலையாகக் கொண்டு வழிநடத்தப்படும் நாடு தழுவிய பெரஹெரா திருவிழாக்கள் மிகவும் முக்கியமானவை என்று நான் கருதுகிறேன்.
பெற்றோர்களுக்கும் நமது சமூகத்திற்கும் புதிய விழுமியங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இன்று விழுமியங்கள் என்றால் என்ன என்று கேட்டால், செல்வமும் அதிகாரமும் விழுமியங்களாகிவிட்டன. எனவே, நாம் விழுமியங்களுக்கு ஒரு புதிய விளக்கத்தைக் கொடுத்து, நமது விழுமியங்களை ஒரு புதிய இடத்தில் நிலைநிறுத்த வேண்டும். ஒருவருக்கொருவர் எழும் மனிதாபிமானப் பிணைப்பு, கலாசாரப் பாரம்பரியம், வரலாறு மற்றும் கருணையுடனான பிரிக்க முடியாத பிணைப்பு ஆகியவை புதிய விழுமியங்களாக மாற வேண்டும். இல்லையெனில், நம்மால் ஒரு வளர்ந்த நாட்டை உருவாக்க முடியாது.
எனவே, இந்தப் பெரஹெரா உற்சவம் வெறும் அலங்காரம் மட்டுமல்ல, அது நமது சமூகத்தின் ஒரு முக்கிய சாராம்சத்தையும் பிரதிபலிக்கிறது. ஒரு தேசமாக நாம் எதிர்கொள்ளும் பேரழிவுகரமான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்காக, தேசத்தை விழித்தெழச் செய்து ஒரு புதிய மறுமலர்ச்சிக்கு வழிநடத்தும் யுகமொன்றை நாம் தொடங்குவோம். இல்லையெனில், நம் கண் முன்னே அனைத்தும் அழிக்கப்படும் ஒரு யுகமே உருவாகும்.
இன்று, மனித நடவடிக்கைகளின் பாதகமான விளைவுகளால் நமது சூழலமைப்பு அழிக்கப்பட்டு வருகிறது. ஒரு தேசமாக நம்மால் இயற்கை பேரழிவுகளைத் தாங்கிக்கொள்ள முடியும். இருப்பினும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் இயற்கை பேரழிவுகள் கொடிய பேரழிவுகளாக மாறுகின்றன. எனவே, சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு வலுப்படுத்தப்பட வேண்டும். இன்று, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கண்மூடித்தனமாக நடைபெறுகின்ற இத்தகைய யுகத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். நாம் அனைவரும் கடந்த காலத்தைப் பற்றி சிந்தித்து, மாற்றப்பட வேண்டிய இடங்களை மாற்றுவோம். கடந்த காலங்களில் நடந்தவை எவை என்பதை ஆராய்ந்து, நல்லதைப் பாதுகாத்து, தீயதை மாற்றுவதற்கு எவ்வித தயக்கமுமின்றி தலையீடுகளை மேற்கொள்வோம். இத்தகைய பங்களிப்பை நிறைவேற்றுவதில் அனைவரும் இணையுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.
இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி டி.கே. ஹினிதும சுனில் செனவி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, மத்திய மாகாண ஆளுநர் விசேட மருத்துவ நிபுணர் ஹர்ஷ சுரங்க, பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் டி.கே. நந்திக சனத் குமாநாயக்க, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த ஆகியோர் உட்பட அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் மற்றும் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-08-28
