**மலையக மக்களின் 200 ஆண்டுகால துயரத்திற்கு தீர்வு: சொந்தக் காணியில் வீடுகள் வழங்கி புதிய வரலாறு!*
மலையக மக்களின் பல தசாப்த கால போராட்டங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவர்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி புதிய வரலாற்றைப் படைத்து வருவதாகத் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு கபரகல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு உறுதிப்பத்திரத்துடனான வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று (28) ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.இதில்கலந்துக்கொண்ட போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கத்தின் முழுமையான நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 50 புதிய வீடுகள் இன்று பாதிக்கப்பட்ட மலையகக் குடும்பங்களின் உடைமையாக்கப்பட்டுள்ளன. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. மலையகத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் எதிர்காலத்தில் காணி உரிமையுடன் கூடிய தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்.
மேலும், எவ்வித போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ அல்லது உண்ணாவிரதங்களோ இன்றி மலையக தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பள உயர்வு அரசாங்கத்தால் ஏற்கனவே வெற்றிகரமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
எமது அரசாங்கத்தால் ‘ஹட்டன் பிரகடனத்தில்’ மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் அரசாங்கம் மிக வேகமாகச் சாதித்து காட்டுகிறது. 200 வருட காலமாக லயன் குடியிருப்புகளில் முடங்கிக்கிடந்த நிலையை மாற்றி, எமது முன்னோர்கள் சிந்திய இரத்தத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சொந்த மண்ணில் தலைநிமிர்ந்து வாழும் சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

