உடல் ரீதியிலான சவால்களைத் தமது கல்விக்கனவுகளுக்குத் தடையாகக் கொள்ளாது, இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘பல்கலைக்கழக சாதனையாளர்களின் பெருமை’ விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் மூன்றாவது கட்டம் நிகழ்ச்சி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் (12) நடைபெற்றது.
இத்திட்டத்தின் கீழ், தற்போது இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் கௌரவிக்கப்படுவதுடன், மாணவர் ஒருவருக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபா உதவித்தொகையாக வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் முதலாவது வேலைத்திட்டம் கொழும்பிலும், இரண்டாவது வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்ற நிலையில், இதன் மூன்றாவது மற்றும் இறுதி வேலைத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கமைய கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் 50 மாற்றுத்திறனாளி மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், முழுமையான வேலைத்திட்டத்தின் மூலம் இவ்வருடத்தில் சுமார் 400 மாணவர்கள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய:
“இந்த சந்தர்ப்பத்தை மிகவும் பெறுமதிமிக்க ஒரு சந்தர்ப்பமாக நான் கருதுகிறேன். நமது நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மனவுறுதி, அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியுடன் அனைத்துத் தடைகளையும் தாண்டி
முன்னோக்கிச் செல்லும் உங்களைப் போன்ற மாணவர் சமூகத்தைக் கௌரவிக்கக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவரையும் குறித்து பெருமிதம் அடைகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பாடத்தை எங்களுக்குக் கற்றுத் தருகிறீர்கள். சவால்களுக்கு அஞ்சாது எவ்வாறு முன்னோக்கிச் செல்வது என்பதற்கு நீங்களே முன்மாதிரியாகத் திகழ்கிறீர்கள். உங்களைப் பல்கலைக்கழகம் வரை கொண்டு சேர்த்த பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்பதை அனைவருக்கும் உருவாக்குவதாகும். அந்தப் பயணத்தில் எந்தவொரு சவாலுக்கு மத்தியிலும் நாம் எந்தவொரு மாணவரையும் கைவிடப் போவதில்லை. அனைவருக்கும் கௌரவமான மற்றும் சமத்துவமான கல்வி கட்டமைப்பொன்றை உருவாக்கவே நாம் முயற்சிக்கிறோம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக அரசாங்கம் என்ற ரீதியில் நாம் பொறுப்பை ஏற்றுக்கொண்டது அதனாலேயே ஆகும்.
இலவசக் கல்வி என்பது புத்தகங்களை வழங்குவது மட்டுமன்றி, கற்பதற்குத் தேவையான சூழலைச் சரியாக அமைத்துக் கொடுப்பதாகும். தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரதானப் பிரச்சினை விடுதிப் பிரச்சினையாகும் என்பதை நாம் அறிவோம். அந்த விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டத்தை இவ்வருடத்தில் நாம் ஆரம்பித்துள்ளோம். அதற்கமைய 3 வருடங்களுக்குள் சுமார் 16,000 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்க நாம் எதிர்பார்க்கிறோம். அவ்விடுதிகள் மாற்றுத்திறனாளி மாணவர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.”
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன:
“ஜனாதிபதி நிதியம் 1978 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிதி கொழும்புக்கு வெளியே உள்ள மக்களைச் சென்றடைய 47 ஆண்டுகள் எடுத்துள்ளன. இது மக்களைச் சென்றடைய வேண்டும் என 2025 ஜனவரி 28 ஆம் திகதியே தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய ஜனாதிபதி நிதியத்தை கொழும்புடன் மட்டும் கட்டுப்படுத்தாது, அதன் அனைத்து நடவடிக்கைகளும் பிரதேச செயலக மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. தற்போது ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் விண்ணப்பங்கள் 2024 ஆம் ஆண்டுடன்
ஒப்பிடுகையில் 2025 இல் 59% அதிகரிப்பைக் காட்டுகின்றன. 2026 ஆம் ஆண்டில் இது 2025 ஆம் ஆண்டின் முதல் 08 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 43.3% அதிகரிப்பாகும். இப்போது ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளைப் பெற பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்து கொழும்புக்கு வர வேண்டிய அவசியமில்லை.
அத்துடன், இதற்கு முன்னர் தெரிவுசெய்யப்பட்ட சில வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும்போது மட்டுமே ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற முடிந்தது. தற்போது எந்தவொரு வைத்தியசாலைகளுக்கும் இச்சேவையை பெறமுடியும். மருத்துவ சேவைகள் மட்டுமன்றி ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் 2025-06-21 ஆம் திகதியளவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் மூலம் அனைத்து பிரதேச செயலகங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இச்செயற்பாட்டில் பிரதேச செயலாளர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்ளும் மிகவும் திறம்படச் செயல்படுகின்றனர். அந்தப் பாராட்டுக்குரிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்கவும் இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். இவ்வாறு கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் பயன்பாட்டை நாட்டின் அனைத்து மக்களுக்கும் வழங்க முடிந்ததையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.”
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி:
“இந்தச் சந்தர்ப்பம் கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமன்றி முழு நாட்டிற்குமே ஒரு முக்கிய சந்தர்ப்பம் என நான் நம்புகிறேன். ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பல்கலைக்கழகங்களில் உள்ள விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளுக்கு இவ்வாறானதொரு கொடுப்பனவை வழங்கத் தீர்மானித்ததையிட்டு நான் ஆச்சரியப்படவில்லை. அது அவர்களின் உரிமையாகும். ஜனாதிபதி நிதியம் இதுவரை காலமும் அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் குடும்ப உறவினர்களுக்கும் வசதிகளை வழங்குவதற்கே பயன்படுத்தப்பட்டது. அதை மக்களின் நிதியமாக மாற்றியது நமது அரசாங்கமாகும். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பல்கலைக்கழகக் கல்வியைப் பயிலும் மாற்றுத்திறனாளிப் பிள்ளையொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா கிடைப்பது என்பது மிகப்பெரிய நிவாரணமாகும். எனவே, எவரையும் கைவிடாத கொள்கையின் கீழ்
ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ள இத்திட்டம் முழு மாணவர் சமூகத்தின் அன்பையும் கௌரவத்தையும் பெறும் தீர்மானமாகும்.”
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே:
“ஜனாதிபதி உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு, உங்களைப் போன்ற பல்கலைக்கழகக் கல்வியைப் பயிலும் மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளைக் கௌரவிக்க வேண்டும் எனத் தீர்மானித்தது. இவ்வாறானதொரு வேலைத்திட்டம் இலங்கையில் முதன்முறையாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி நிதியத்திற்கும் நீங்கள் சிறந்த பிள்ளைகளாகத் திகழ்கிறீர்கள். உங்களைப் போன்ற சிறந்த பிள்ளைகளை கௌரவிக்கக் கிடைத்தமை ஜனாதிபதி நிதியத்திற்குக் கிடைத்த பாக்கியமாகும். நாம் இவ்வேலைத்திட்டத்தைக் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் நடாத்தி, கிழக்கு மாகாண வேலைத்திட்டத்துடன் நிறைவு செய்கிறோம். இனிவரும் காலங்களில் பல்கலைக்கழகப் பிரவேசத்தைப் பெறும் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிப் பிள்ளைக்கும் ஜனாதிபதி நிதியத்தின் இந்த ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படும்.”
கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
