சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, விசேட நாடாளுமன்றத் தூதுக்குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (22) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி தலைமையில் செல்லவுள்ள இந்தக் குழுவில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் இடம்பெறவுள்ளனர். இந்த விசேட தூதுக்குழுவினர் சவூதி அரேபிய மன்னரை நேரடியாகச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதன்போது, சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியிலான பொதுமன்னிப்பை வழங்குமாறு கோரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அனுப்பிவைக்கப்படும் விசேட கடிதத்தை அந்தக் குழு சவூதி மன்னரிடம் கையளிக்கவுள்ளது.
அதேநேரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாகச் சட்டரீதியாக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ள சிவராசா அனோஜனின் வழக்கிற்காக, இதுவரை ஏற்பட்ட மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அனைத்துச் செலவுகளையும் அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பேற்கும் எனவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில், மேன்முறையீட்டிற்காக அவரது குடும்பத்தினரிடம் முன்னர் பெறப்பட்டிருந்த பணமும் மீளக் கையளிக்கப்படும் என்றும், அனோஜனை எவ்வாறayum விடுவிப்பதற்கான சகல வழிகளிலும் அரசாங்கம் தீவிர முயற்சிகளை முன்னெடுக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
