ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்ற உபகுழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹேஷா விதானகே தலைமையிலான கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு இணைவதை ‘புதிய நியமனமாக’ கருதாமல், ‘பதவி உயர்வாக’ கருதும் வகையில் சேவைப் பிரமாணக் குறிப்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய நடைமுறையால் சிரேஷ்ட ஆசிரியர்கள் அதிபர் சேவையில் இணைவதற்கு தயக்கம் காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், கல்விமாணி B.Ed பட்டதாரிகளை ஆசிரியர் சேவையின் 2 ஆம் தரத்திற்கு நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மாகாண மட்டத்திலுள்ள பாடசார் வெற்றிடங்களுக்கு அமைவாக இந்த ஆட்சேர்ப்புகள் இடம்பெறும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, தென் மாகாணத்தில் 261 ஆய்வுகூடப் பணியாளர்கள் மற்றும் காவலாளிகளுக்கு நிர்வாகத் தவறு காரணமாக மேலதிக சம்பளம் வழங்கப்பட்ட விவகாரத்தில், ஊழியர்களுக்கு சாதகமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க தென் மாகாண ஆளுநருக்குக் கடிதம் அனுப்பவும் குழு தீர்மானித்துள்ளது.
