கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வந்த ‘சுபக’, ‘தொழில்நுட்பவியல்’ மற்றும் ‘சுஜாத தியணி’ புலமைப்பரிசில் திட்டங்களை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டலுக்கு அமைவாக மேலும் விரிவுபடுத்தி, ஜனாதிபதி நிதியத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்வி அமைச்சு மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதற்கமைய, எதிர்வரும் ஆண்டு முதல் ‘சுஜாத தியணி’ மற்றும் ‘தொழில்நுட்பவியல்’ புலமைப்பரிசில்களின் கீழ் மாதாந்தம் வழங்கப்படும் 750 ரூபாய் கொடுப்பனவை 1,500 ரூபாவாக அதிகரிப்பதற்கும், பயனாளிகளின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்துவதற்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகளை உடனே செலுத்தி முடிக்குமாறும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
