ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில், டிக்கோயா வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஹட்டனிலிருந்து நோர்வூட் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று, எதிர்த்திசையில் சாமிமலையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
சாரதி தொலைபேசியில் உரையாடியவாறு அதிவேகமாக முச்சக்கர வண்டியைச் செலுத்தியமையினால், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பேருந்துடன் மோதியிருக்கலாம் என நோர்வூட் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உடனடியாக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், விபத்தின் காரணமாக முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், பேருந்தின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
