ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பல்கலைக்கழக மாணவர்களுக்காக இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம், கடந்த 10 ஆம் திகதி ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 1,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் கண்கள் பரிசோதிக்கப்பட்டு, அவற்றுக்கான கண்ணாடிச் சட்டங்கள் வழங்கப்பட்டதோடு, செவிப்புலன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இப்பரிசோதனைகளின் அடிப்படையில், உரிய மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.
Stroud Rotary Club மற்றும் Wish மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் முதற்கட்டம், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு 600 மாணவர்கள் பயனடைந்தனர். எதிர்காலத்தில் இத்திட்டத்தை நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே குறிப்பிட்டுள்ளார்.
ருஹுணு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பி.ஏ. ஜயந்த, பதிவாளர், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் Wish மன்றத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
