முன்னாள் முதலாம் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்…”
“‘சிரிலிய சவிய’ நிதி முறைகேட்டுக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.
நேற்றைய தினம் சிறைச்சாலையில் இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவருக்குத் திறந்த இதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சந்தேக நபருக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும், அவரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்துவது குறித்து சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஷிராந்தி ராஜபக்ஷ சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறாரா என்பது குறித்த விபரங்களை உடனடியாக விசாரித்து அறிவிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன், அறிக்கை கிடைக்கும் வரை வழக்கினைப் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்துள்ளார்.”
