கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை. மனோ, சஜித்திடம் தெரிவிப்பு
கண்டி மல்வது பீடாதிபதியிடம் SJB சிரேஷ்ட உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல, தமிழ், முஸ்லிம், இலங்கையர்களை தொடர் படுத்தி பேசியமை கடும் தவறானது ஆகும்.
அரசாங்கம், தமிழ் பேசும் மக்களை சந்தோஷ படுத்த, ஞானசாரர் விவகாரத்தை பயன் படுத்துகிறது என்ற பொருள் படும் கிரியல்லவின் கருத்து அதிக பிரசங்கிதனமானதாகும்.
மேலும், சிறுபான்மை மக்களை “சுலுஜாதி”, பெரும்பான்மை மக்களை “மகாஜாதி” என அடையாள படுத்துகின்றமை தவறாகும். இந்த வார்த்தையாடல்களை நாம் இப்போது கடந்து வந்து விட்டோம்.
ஞானசாரர் என்ற சிறை கைதி தேரரின் சீருடை தொடர்பில் ஜனாதிபதி குழு இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கட்டும்.
அதேபோல், கடந்த ஜனாதிபதி அளித்த பொது மன்னிப்பு முறை படி இல்லை என சட்டம் கூறுகிறது. அதையும் முறை படி மாற்றி, ஞானசாரருக்கு இன்றைய ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினாலும், நான் ஆட்சேபிக்க போவதில்லை.
இதை எல்லாம் அரசாங்கமும், பெளத்த பீடங்களும் பார்த்து கொள்ளட்டும்.
தமிழ் பேசும் மக்களுக்கும், இவை தொடர்பில் பொது வெளிகளில் பேச வேண்டாம் என நான் ஏற்கனவே பொறுப்புடன் கோரி உள்ளேன். இவை இறுதியில் எங்கே புய் முடியும் என என் பட்டறிவுக்கு தெரியும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பில், மனோ கணேசன் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எழுதியுள்ள கடிதத்திலும், அவரிடம் நேரிலும் கூறியுள்ளதாவது;
கௌரவ சஜித் பிரேமதாச MP
எதிர்க்கட்சி தலைவர்
SJB மற்றும் SJS தலைவர்
அன்புள்ள சஜித்,
பொருள்:
கண்டியில் மகா நாயக்க தேரரை சந்தித்தபோது தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பான கண்டனம்
SJB பிரதிநிதிகள் குழுவொன்று கண்டியில் மகா நாயக்க தேரரை சந்தித்தமைக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
எனினும், இந்த சந்திப்பின் போது SJB இன் சிரேஷ்ட உறுப்பினர் திரு. லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகள் குறித்து நான் ஆழ்ந்த கவலையும் ஏமாற்றமும் அடைகின்றேன்.
வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பான விவகாரத்தை அரசாங்கம் தமிழ் பேசும் மக்களையும் சிங்கள பௌத்த சமூகத்தைச் சாராத ஏனைய மக்களையும் திருப்திப்படுத்துவதற்காக பயன்படுத்துவதாக கிரியல்ல கூறியதாக தெரிவிக்க படுகிறது.
இலங்கையின் பன்மைத்துவ சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கங்களாகவும், சக குடிமக்களாகவும் விளங்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை குறிப்பிடுவதற்கு காலாவதியான சொற்களும் பயன்படுத்தியது குறித்தும் நான் அதிருப்தி அடைகின்றேன்.
இக்கருத்துகள் பிளவுகளை ஏற்படுத்தும் கருத்தாடல்களை வலுப்படுத்துகின்றன. எமது மக்களின் கண்ணியத்தையும் பாதிக்கிறது.
நாட்டின் உயரிய பௌத்த மத தலைமைத்துவத்துடனான கலந்துரையாடலின்போது இத்தகைய மொழிநடை பயன்படுத்த பட்டிருப்பது வருந்தத்தக்கது.
வண ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை, சட்டத்தின் ஆட்சி, என நான் நம்புகின்றேன்.
அந்த அடிப்படையில், நீதிமன்ற தீர்ப்பை கேள்விக்குட்படுத்துவதை நாம் தவிர்த்து வந்துள்ளோம்.
அவருக்கு முன்னர் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு சட்டரீதியாக குறைபாடு உடையது என இப்போது கண்டு அறியப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி உரிய பரிசீலனைக்கு பின்னர், சட்டத்திற்கு அமைவாக அக்குறைபாடுகளைச் சரிசெய்து புதிய மன்னிப்பை வழங்கி, சட்டபூர்வமான ஜனாதிபதி அதிகாரத்தை பயன் படுத்தினால் நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன்.
சட்டத்தின் வரம்பிற்குள் முறையாக மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கையை நான் கொள்கையளவில் மதிப்பேன்.
சிறையில் வண தேரர் அணிந்திருந்த உடை தொடர்பான அண்மைய சர்ச்சை பொதுமக்கள் மத்தியில் கணிசமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்புடைய நடைமுறை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இவ்விடயம் குறித்து பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிப்பதை தவிர்க்குமாறு தமிழ் பேசும் இலங்கையர்களிடம் நான் ஏற்கனவே பகிரங்க வேண்டுகோள்களை விடுத்துள்ளேன்.
ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளபடி, இவ்விடயத்தை ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அரச சிறைச்சாலைகளில் கைதிகள் அணியும் உடைகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அக்குழு இரண்டு வாரங்களுக்குள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
சட்டங்களுக்கு உரிய மதிப்பளித்து, இந்த நடைமுறையின் ஊடாகவே இவ்விடயம் கையாளப்பட வேண்டும் என நான் நம்புகின்றேன்.
எவ்வாறாயினும், இந்த விடயங்களை திரு. லக்ஷ்மன் கிரியெல்ல தொடர்பான எனது கருத்துகளுடன் ஒன்றாக கலந்து நோக்க கூடாது. வண ஞானசார தேரர் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஒருவர் மாறுபட்ட கருத்துகளை கொண்டிருக்கலாம். ஆனால், இந்த விடயங்களில் எதுவும் தமிழ் மற்றும் முஸ்லிம் குடிமக்களை ஓரங்கட்டவோ, இழிவுபடுத்தவோ கூடிய மொழிநடையை நியாயப்படுத்தாது.
எனவே, திரு. கிரியெல்லவின் கருத்துகள் குறித்து நான் ஆழ்ந்த அதிருப்தியும், வருத்தமும், கொண்டுள்ளேன் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
இந்தக் கவலை, நான் எதிர்பார்க்கும் ஆக்கபூர்வமான நோக்கில் புரிந்துகொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகின்றேன்.
கடந்த காலத்தின் பிளவுகளை ஏற்படுத்திய மொழிநடையை மீண்டும் உயிர்ப்பிக்காமல், சர்ச்சைக்குரிய விடயங்களை கூட்டாக கையாளும் எமது திறனிலேயே இலங்கையின் ஜனநாயக எதிர்காலம் தங்கியுள்ளது.
தங்கள் உண்மையுள்ள,
மனோ கணேசன்
தலைவர், தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA)
