தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் கல்கிஸ்ஸையில் அமைந்துள்ள வீட்டில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சோதனை, இன்று அதிகாலை சுமார் 4.30 மணி வரை நீடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அதிகாரிகள் வீட்டின் அனைத்துப் பகுதிகளையும் சோதனையிட்டதுடன், வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளனர். எனினும், இந்தச் சோதனைக்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் இதுவரை உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடவில்லை எனவும், மேலதிக தகவல்கள் இன்று பகல் வெளியாகலாம் எனவும் சட்டத்தரணி மனோஜ் கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

