திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை (02) இரவு வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் சிலர் இருந்தபோதே இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய கடற்படைச் சிப்பாயே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்துடன், ஆனந்தன்குளம் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 38 வயதுடைய இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரது நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலுக்கு டி-56 (T-56) ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தலுடன் ஏற்பட்ட தகராறே இந்தத் துப்பாக்கிச்சூட்டிற்குக் காரணம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் திருகோணமலைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் அடங்கிய பல பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
