அமரர் ரமணி பாலேந்திராவின் பத்தாவது ஆண்டு நினைவாக வேவல்வத்தை தமிழ் வித்தியாலயத்தில் நினைவு நூலகம் திறப்பு!

ஆசிரியையின் அயராத தனிப்பட்ட முயற்சியில் மாணவர்களுக்கான அறிவுப் பொக்கிஷம் உருவாக்கம்
இரத்தினபுரி, வேவல்வத்தை தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதையும், அறிவு வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு “அமரர் ரமணி பாலேந்திரா நினைவு நூலகம்” 2026 நவம்பர் 19ஆம் திகதி சிறப்பாகத் திறந்து வைக்கப்பட்டது.
அமரர் ரமணி பாலேந்திரா அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவாக, அவரது துணைவரான பெரியசாமி பாலேந்திரன் அவர்களின் நன்கொடையிலும் ஆதரவிலும் இந்நினைவு நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நினைவொன்றை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பயனளிக்கும் உன்னதமான சமூகப் பணியாக மாற்றியமைத்துள்ளமை இம்முயற்சியின் தனிச்சிறப்பாகும்.
வேவல்வத்தை தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியை ஜே. சசிகலா அவர்களின் அயராத தனிப்பட்ட முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்குச் சிந்தனையின் விளைவாக இத்திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே காணப்படும் வாசிப்புத் திறன் குறைபாடுகளையும், வாசிப்பு வளங்களின் பற்றாக்குறையையும் உணர்ந்த அவர், மாணவர்களுக்குப் பொருத்தமான வாசிப்புச் சூழலைப் பாடசாலையிலேயே உருவாக்க வேண்டும் என்ற உயரிய இலட்சியத்துடன் இம்முயற்சியை ஆரம்பித்தார்.
திட்டத்தின் ஆரம்பச் சிந்தனை முதல் திட்டமிடல், வளங்களைத் திரட்டுதல், நூலகச் சூழலை உருவாக்குதல் மற்றும் செயற்படுத்துதல் வரையிலான பணிகளை முன்னின்று ஒருங்கிணைத்து, தனது தனிப்பட்ட அர்ப்பணிப்பின் மூலம் இந்நூலகம் உருவாகுவதற்கு அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.
இம்முயற்சிக்கு பெரிதும் துணை நின்று வழிகாட்டியாக விளங்கிய உயிரவன் ஐயா மற்றும் இத்திட்டத்தினை கொண்டு நடாத்த நிதியினை வழங்கிய பெரியசாமி பாலேந்திரன் அவர்களோடு அவருடை வழிகாட்டலை சிரமேற்று முன்நின்று இப் பயணத்திற்கு வழு சேர்த்த மாட்டுவாகல ஆசிரியை ஜெ. ஜெயதர்ஷனி
இந்நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக “அரும்புகள் வாசிப்பு கழகம்” அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கழகத்தின் ஊடாக மாணவர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை வளர்த்தல், வாசிப்புத் திறனை மேம்படுத்துதல், சுயகற்றலை ஊக்குவித்தல், படைப்பாற்றல் மற்றும் மொழித்திறன்களை விருத்தி செய்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் கல்வித்துறை அதிகாரிகள், சர்வோதய அமைப்பின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஒருவரின் நினைவைப் போற்றுவதற்கான மிகச்சிறந்த வழிகளில் ஒன்று, அவரது பெயரில் எதிர்காலத் தலைமுறைக்கு நன்மை பயக்கும் பணியை முன்னெடுப்பதாகும். அந்த வகையில், அமரர் ரமணி பாலேந்திரா அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள இந்நூலகம் பல தலைமுறை மாணவர்களின் அறிவுப் பயணத்திற்கு ஒளிவிளக்காக அமையும்.
இதற்காக பல இன்னல்களையும் சவால்களையும் கடந்து தன்னுடைய இலட்சியமாக ஒரு நூலகம் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் வெற்றியை எட்டியுள்ள ஆசிரியை ஜெ. சசிகலா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
