வாத்துவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவனை தாக்கியதாக கூறப்படும் மாணவர்கள் குழுவொன்றில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதே பாடசாலையில் 10 மற்றும் 12ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மற்றுமொரு மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில் எழுந்த வாக்குவாதம் முற்றி, பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் மூன்று மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும், இது தொடர்பான முறைப்பாட்டை சமரச சபைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.