வெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி லுணுகலை பசறை பதுளை ஆகிய பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட இளைஞர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக பதுளை பொலிஸ் நிலையத்தில் கடந்த மாதம் (11.02) புகாரளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து லுணுகலை அடாவத்தைப் பகுதியை சேர்ந்த 48,50 வயதுடைய இருவரை அன்றைய தினமே பதுளை பொலிஸார் கைது செய்தனர்.
பின் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களினால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கு அமைய லுணுகலை பகுதியை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் கடந்த மாதம் 13 ம் திகதி லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இதன்போது மூன்று சந்தேக நபர்களையும் பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த மூன்று சந்தேக நபர்களையும் கடந்த மாதம் 02/23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கு அமைய லுணுகலை பகுதியை சேர்ந்த பாடசாலை ஒன்றின் காவலாளி ஒருவர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பசறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார். காவலாளியான சந்தேக நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
பின்னர் இம்மாதம் 02/03 பசறை நீதிமன்றத்தினால் காவலாளியான சந்தேக நபருக்கு மாத்திரம் பிணை வழங்கப்பட்டது.
பாடசாலை அதிபர் உட்பட மேலும் இருவரையும் கடந்த மாதம் 02/23 ம் திகதி பசறை நீதிமன்றத்தில் வழக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது அதிபர் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் இம்மாதம் 09/03 அதாவது இன்றைய தினம் பசறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு சிறைச்சாலை காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதேபோல் இன்றைய தினம் மூன்று சந்தேக நபர்களையும் பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது பொலிஸாரினால் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாகவும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் குறித்த மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 03/23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ராமு தனராஜா
