இந்த நாட்களில் குழந்தைகளுக்கு இடையில் டெங்கு, இன்ப்ளூவன்ஸா மற்றும் வாந்திபேதி போன்ற நோய்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன என்று குழந்தைகள் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக குழந்தைகளுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்குமாயின், இரத்தப் பரிசோதனை (Full Blood Count) ஒன்றை மேற்கொள்ளுமாறும், விசேடமாக டெங்கு அதிகரித்துள்ள பிரதேசங்களில் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமது வீடுகள் மற்றும் பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்கள் காணப்படின், அவ்விடங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும், நாம் நினைத்துக்கூடப்பார்க்காத இடங்களில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதனால், அது குறித்தும் அவதானமாக இருக்குமாறு விசேட வைத்திய நிபுணர் பொது மக்களை கேட:க்கொண்டுள்ளார்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக இன்ப்ளூவன்ஸா தொற்றாளர்கள்; மிக வேகமாகப் பரவி வருகின்றனர். இந்த தொற்றானது, மிக எளிதாக ஏனையவர்களுக்கும் பரவக்கூடியது என்பதனால், குழந்தைகளுக்கு இருமல், சளி இருந்தால் முகக் கவசம் அணிந்து வீட்டிலேயே வைத்திருப்பது நல்லது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் ஈக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளன. இதனால் மக்களிடையே வாந்திபேதி நிலையும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
மேலும், குழந்தைகளின் மலத்துடன் இரத்தம் வெளியேறினால், உடனடியாக வைத்தியர் ஒருவரை அணுகுமாறும் அல்லது வைத்தியசாலைக்கு உட்படுத்துமாறும் அர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
