சீரற்ற காலநிலை காரணமாக பாரிய மரங்கள் காணப்படும் இடங்களில் வசிப்போர் .அவதானத்துடன் செயல்படுமாறு நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மலையகத்தின் பல பிரதேசங்களிலும் பலத்த காற்று வீசியதினால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
இதனைத்தொடந்தே இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் இவ்வாறு அறிவித்துள்ளார்
நுவரெலியா மாவட்டம் வலப்பனை, உடப்புஸலாவை, ருப்பஹா, கந்தப்பளை ஆகிய பல இடங்களில் பாரிய மரங்கள் முறிந்துவழ்ந்துள்ளன. நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேசத்தில் நேற்று (07) இரவு முதல் பலத்த காற்று வீசுகின்றது. அதே வேளை கடுமையான குளிர் கால நிலையும் நிலவுகின்றது.
வலப்பனை பிரதேசத்தில் ருப்பஹா, மடுல்ல, உடப்புஸலாவை, கல்கடப்பத்தனை, தெரிப்பே, ஹரஸ்பெத்த, இராகலை, புரூக்சைட், கந்தப்பளை ஆகிய பிரதேசங்களில் வீசும் கடும் காற்றினால் வீதியோரங்களில் பாரிய மரங்கள் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
இராகலை புரூக்சைட் பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் வீழ்ந்து விபத்துக்கு உள்ளானது. முச்சக்கர வண்டி சாரதி உட்பட மூவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்..
உடப்புஸ்ஸல்லாவ கல்கட பத்தனையில் வீடு மீது பாரிய மரக்கிளை வீழ்ந்து ஒருவர் இன்று (08) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
வலப்பனை-நில்தண்டாஹின்ன ரூப்பஹா மற்றும் உடப்புஸலாவை -மடுல்ல பிரதேச பிரதான வீதிகளில் பாரிய மரங்கள் வேருடன் சரிந்ததினால் மின் கம்பங்கள் முறிந்துள்ளது. மரங்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வலப்பனை பிரதேசத்திற்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
உடப்புஸ்ஸல்லாவ-மெத்திவரன நிவாச பகுதியில் வீடொன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இராகலை உயர் நிலை பாடசாலையின் கட்டடம் ஒன்றின் மீது பாரிய மரம் வீழ்ந்துள்ளது.
இக்கட்டடத்தில் பயிலும் உயர்தர மாணவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.