பசறை நிருபர்
பதுளை போதனா வைத்தியசாலைக்கு இதயம் கதீடமாக்கும் பிரிவைப் (Cath Lab)பெற்றுக் கொள்வதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின், ஊவா மாகாண கிளை நன்கொடையாளர்களின் நிதி உதவியை நாடியுள்ளதாக பதுளை போதனா வைத்தியசாலையின் மார்பு நோய் சிகிச்சை நிபுணர் வைத்தியர் பாலித்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்; இலங்கையில் 9 மாகாணங்களில் ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் இப்பிரிவுகள் இல்லாமல் உள்ளன. இதன்காரணமாக இதய நோயாளர்களுக்கு என்ஜியோகிராம், ஸ்டென்ட் சிகிச்சைகளை மாகாண வைத்தியசாலைகளில் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இச் சிகிச்சைக்காக கொழும்பு, கண்டி வைத்தியசாலைகளையே இதய நோயாளர்கள் நாடி வருகின்றனர்.
தனியார் வைத்தியசாலைகளில் இச்சிகிச்சையைப் பெற 10 தொடக்கம் 15 இலட்சம் ரூபாய் வரை செலவாகின்றது. மத்தியத் தர மக்களுக்கு இவ்வாறான சிகிச்சையைப் பெறுவது இயலாத காரியமாகும். அண்மைக காலாமாக இதய நோய் காரணமாக பதுளை மாவட்டத்தில் அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
ஊவா மாகாணத்தில் வாழும் பொது மக்களின் நன்மை கருதி பதுளை போதனா வைத்தியசாலையில் இப்பிரிவைத் தாபிப்பதற்கு 250 தொடக்கம் 300 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இச் செயற்பாட்டிற்காக நிதி உதவி வழங்க விரும்புபவர்கள் Government Medical Officer’s Association என்ற பெயருடைய மக்கள் வங்கி,பதுளை கிளை வங்கிக் கணக்கின் 010100102549429 என்ற இலக்கத்தில் வைப்பு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை வைத்திய நிபுணரின் 0704440666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளமாறு மேலும் தெரிவித்தார்.
