வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) தற்போது ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்துத் தடைகளை நீக்குவதற்கு சீனா உதவும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய அவர், சீனாவின் 90 சதவீத எண்ணெய் இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுவதாகவும், அதன் காரணமாக இந்த விவகாரத்தில் சீனா உரிய ஒத்துழைப்பை வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் சீன ஜனாதிபதியுடன் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு தள்ளிப்போகக்கூடும் எனத் தெரிவித்த ட்ரம்ப், அதற்கான தெளிவான காரணங்களை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், அந்தச் சந்திப்பிற்கு முன்னதாக ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை சீனா முன்னெடுக்கும் எனத் தான் கருதுவதாக அவர் கூறினார்.
ஈரானின் எண்ணெய் உற்பத்தியில் சுமார் 90 சதவீதத்தை சீனா கொள்வனவு செய்கிறது. இருப்பினும், இது சீனாவின் மொத்த எண்ணெய் கொள்வனவில் சுமார் 12 சதவீதம் மட்டுமே ஆகும்.
அதேவேளை, வாஷிங்டனைச் சேர்ந்த உத்தியோகபூர்வ மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (CSIS) வெளியிட்டுள்ள தகவலின்படி, சீனாவின் மொத்த எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 40 சதவீதமே ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்ட 90% என்ற புள்ளிவிபரத்துடன் முரண்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
