மனிதநேயத்துடன் செயற்பட்ட தலவாக்கலை பொலிஸார்: மயங்கி விழுந்தவரை காப்பாற்றி 25 இலட்சம் பெறுமதியான பொருட்களையும் ஒப்படைப்பு!
தலவாக்கலை: மனிதநேயம் குறைந்து வரும் தற்காலச் சூழலில், கடமையைத் தாண்டி மனிதாபிமானத்துடன் செயற்பட்ட தலவாக்கலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
சம்பவம் குறித்த விபரமாவது: கடந்த சனிக்கிழமை தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரில் நபர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து வீதியில் விழுந்துள்ளார். குறித்த நபர் நீண்டநேரமாக சுயநினைவற்ற நிலையில் தரையில் கிடந்த போதிலும், அந்த இடத்தில் இருந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள் அல்லது அங்கிருந்த பொதுமக்கள் எவரும் அவரை காப்பாற்றவோ அல்லது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவோ முன்வரவில்லை எனத் தெரியவருகிறது.
இதனையடுத்து, தலவாக்கலை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த தலவாக்கலை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி திரு. சுகத் மடுலகல்ல உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், மயக்கமடைந்த நிலையில் இருந்த நபரை உடனடியாக முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
பாதுகாக்கப்பட்ட பெறுமதியான பொருட்கள்: மயங்கி விழுந்த நபரிடம் சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரொக்கப்பணம் மற்றும் விலை உயர்ந்த கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பெறுமதிமிக்க பொருட்கள் இருந்துள்ளன. அவற்றை மிகவும் பாதுகாப்பாக மீட்ட பொலிஸார், நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து, இன்றைய தினம் குறித்த நபரின் உறவினர்களை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்த பொலிஸ் அதிகாரிகள், அவர்கள் முன்னிலையில் அனைத்துப் பொருட்களையும் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
உயிர் தப்பிய நபர்: பொலிஸாரின் துரித நடவடிக்கையினால் குறித்த நபர் உடனடியாக கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் உரிய சிகிச்சையைப் பெற்று இன்று (16) குணமடைந்து சுகதேகியாக வீடு திரும்பியுள்ளார்.
எவ்வித எதிர்பார்ப்புமின்றி மனிதநேயத்துடன் செயற்பட்டு ஒரு உயிரையும், அவரது உடைமைகளையும் பாதுகாத்த தலவாக்கலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை, பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
செய்தித் தொகுப்பு: கௌசல்யா
