நுவரெலியா: நுவரெலியா – சீதா எலிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில், அதிவேகமாக வந்த மோட்டார் வாகனத்தினால் ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.
நேற்று (18.03.2026) மாலை 05.02 மணியளவில், சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது. இதன்போது, வலது திசையிலிருந்து மிக அதிவேகமாகவும், போக்குவரத்து விதிகளை மீறியும் வந்த மோட்டார் வாகனம் ஒன்று முச்சக்கர வண்டியை மோதவிருந்தது. எனினும், முச்சக்கர வண்டி ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும் அதிர்ஷ்டவசத்தாலும் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினர்.
இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் (Dash Cam) மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், “மிகவும் மோசமான முறையில் அந்த வாகனம் செலுத்தப்பட்டது, ஒரு நொடி தாமதித்திருந்தாலும் பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்” எனத் தெரிவித்தனர்.
தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இந்த ஆலயப் பகுதியில், வாகனங்கள் இவ்வாறான பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்படுவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாதசாரி கடவைகளில் வேகக்கட்டுப்பாடின்றி பயணிப்பது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி குமார யாப்பா அவர்களிடம் வினவியபோது:
”முச்சக்கர வண்டியின் கமராவில் வாகனத்தின் இலக்கத் தகடு தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், சீதை அம்மன் ஆலயத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அப்பகுதியிலுள்ள ஏனைய பாதுகாப்பு கமராவினை ஆய்வு செய்து வருகிறோம். விதிகளை மீறிச் சென்ற வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் விரைவில் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவோம்,” என உறுதியளித்தார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தித் தொகுப்பு: கஜரூபன் திவ்யா, நுவரெலியா.
