மன்னார் மூர் வீதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு, கணவன் படுகொலை செய்யப்பட்டு சடலம் துண்டு துண்டாக சிதைக்கப்பட்ட கொடூர சம்பவத்தில் முடிவடைந்துள்ளது.
மன்னார் மூர் வீதியில் வசித்து வந்த இந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை (02) இரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் உச்சக்கட்டமாக, மனைவி தனது கணவனைத் தாக்கி கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பின்னர், ஞாயிற்றுக்கிழமை (03) அன்று சடலத்தை மிகக் கொடூரமான முறையில் துண்டு துண்டுகளாக வெட்டியுள்ள சந்தேகநபர், அவற்றை உறைகளில் இட்டு வீட்டின் மலசலகூடக் குழியினுள் வீசி மறைத்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலைச் செய்த பெண், திங்கட்கிழமை (04) மன்னார் பொலிஸ் நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பொலிஸார் மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து, மலசலகூடக் குழியிலிருந்து சிதைக்கப்பட்ட நிலையில் இருந்த சடலத்தை மீட்டனர்.
பொலிசாரின் விசாரணையில் உயிரிழந்தவர்: மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் என அடையாளங்காணப்பட்டுள்ளதோடு
கொலையுடன் சம்பந்தப்பட்ட பெண் சந்தேகநபர் மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குடும்பத் தகராறு முற்றிய நிலையிலேயே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான மனைவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் பகுதியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
