நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில் தேயிலை பறிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், பாம்பு தீண்டியதால் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
குறித்த தோட்டத்தில் உள்ள தேயிலை மலைகள் தற்போது பராமரிப்பின்றி காடு மண்டிக் காணப்படுகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 17) வழமை போன்று தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவரை பாம்பு திடீரென தீண்டியுள்ளது.
பாம்பு தீண்டியதைக் கண்ட சக தொழிலாளர்கள், அவரை உடனடியாக மீட்டு நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர், நேற்று (ஜூன் 18) மதியம் உறவினர்களின் அஞ்சலிக்காக சோளங்கந்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தொழிலாளர்கள் கோரிக்கை
தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் பணிபுரியும் தேயிலை மலைகள் தற்போது காடாக மாறியுள்ளதால், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, தோட்ட நிர்வாகமும் உரிய தரப்பினரும் உடனடியாகத் தேயிலை தோட்டங்களைச் சுத்தப்படுத்தி, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்வர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
