மாற்றமே உலக நியதி என்ற கோட்பாட்டிற்கு மனித சமூகமும் அதன் கலாசாரமும் என்றுமே விதிவிலக்கல்ல. தொன்மையும் ஆழமான வாழ்வியல் தத்துவங்களையும், ஆன்மீகப் பின்னணியையும் கொண்ட இந்து கலாசாரம், இன்று உலகமயமாக்கல் மற்றும் மேற்கத்தேய நாகரிகத்தின் பெரும் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றது.
‘வசுதைவ குடும்பகம்’ எனப்படும் உலகமே ஒரு குடும்பம் என்ற பரந்த சிந்தனையையும், தனிமனித ஒழுக்கத்தையும் ஒட்டுமொத்த சமூக நலனையும் வலியுறுத்தும் ‘அறம்’ என்ற தார்மீகக் கோட்பாட்டையும் அடித்தளமாகக் கொண்டது நம் பண்பாடு ஆகும்.
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் பக்குவத்தைத் தரும் கூட்டுக் குடும்ப முறை, அனுபவத்திற்கு முன்னுரிமை அளித்து வழிகாட்டும் பெரியோரை மதித்தல், மற்றும் ஆடம்பரமற்ற எளிமையான மன அமைதியை மையமாகக் கொண்ட ஆன்மீக வாழ்வியல் என்பன இதன் முக்கிய தூண்களாகத் திகழ்கின்றன.
மறுபுறம், அறிவியல் தொழிற்புரட்சிக்குப் பின் உருவான மேற்கத்திய கலாசாரம் என்பது முற்றிலும் தனிமனித சுதந்திரம், பகுத்தறிவு மற்றும் உலகாயுத இன்பங்களை அடைதல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த இருவேறு தத்துவங்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் இன்றைய நவீன காலகட்டத்தில், நம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒரு நடுநிலையான விமர்சனப் பார்வையோடு அணுக வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரினதும் கட்டாயக் கடமையாகிறது.
இந்தக் கலாசாரப் பரிமாற்றத்தில், மேற்கத்தேய வரவை நாம் ஒருபுறம் முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது என்பதும் வரலாற்று உண்மையாகும். ஏனெனில், அது நம் பாரம்பரிய சமூகத்தில் தேங்கிக் கிடந்த பல முற்போக்குச் சீர்திருத்தங்களை விதைப்பதற்கு மறைமுகக் காரணியாக அமைந்தது.
காலங்காலமாகத் தொடர்ந்த மூடநம்பிக்கைகளையும், மனிதர்களைப் பிரித்து வைத்த சாதியக் கட்டமைப்புகளையும் கேள்வி கேட்கும் பகுத்தறிவை மேற்கத்தேயக் கல்விமுறை நமக்குக் கற்றுத் தந்தது. பெண்ணுரிமை, சமூகச் சமத்துவம், சட்டம் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த விழிப்புணர்வு போன்றவை நம் மண்ணில் வேரூன்ற இந்தத் தாக்கம் பெரும் பாலமாக அமைந்தது. அதுமட்டுமன்றி, உலகத்தோடு போட்டி போடும் நவீன அறிவியல் சிந்தனைகளையும், தகவல் தொழில்நுட்பத் திறனையும் நம் இளைய தலைமுறையினர் பெற்று சர்வதேச அளவில் சாதிப்பதற்கு இது வழியமைத்துக் கொடுத்துள்ளது.
கூட்டுக்குடும்பச் சூழலில் சில நேரங்களில் குடும்பப் பெருமை என்ற பெயரில் நசுக்கப்படும் தனிமனிதத் திறமைகளும், சுய விருப்பங்களும், லட்சியங்களும் சுதந்திரமாக வெளிப்பட இந்த மேற்கத்தேயத் தனிமனித சுதந்திரச் சிந்தனை நமக்கு ஒரு புதிய கதவைத் திறந்துவிட்டுள்ளது என்பதை நாம் நேர்மையோடு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இருப்பினும், மறுபுறத்தில் இந்த மேற்கத்தேய கலாசாரத்தை நாம் நம்முடைய சூழலுக்குப் பொருந்துமா என்று ஆராயாமல், கண்மூடித்தனமாகப் பின்பற்றியதன் விளைவாக, நம்முடைய உன்னதமான பாரம்பரிய விழுமியங்களில் பெரும் விரிசல்களும் சிதைவுகளும் ஏற்பட்டுள்ளன என்பதை நாம் கசப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
நான், என் சுய வளர்ச்சி, என் மகிழ்ச்சி என்ற மிதமிஞ்சிய சுயநலக் கோட்பாடு சமூகத்தில் பெருகியதன் காரணமாக, தியாகமும் பரஸ்பர அன்பும் மறைந்து, இன்று நமது பெருமைக்குரிய கூட்டுக்குடும்பங்கள் முற்றிலுமாக உடைந்து சிதறி வருகின்றன.
முதியோர்களைப் பாரமாக நினைக்கும் மனப்பான்மையும், அதன் விளைவாக நாளுக்கு நாள் பெருகி வரும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையும், உறவுகளுக்குள் சகிப்புத்தன்மை இன்மையால் ஏற்படும் விவாகரத்துக்களும் இத்தாக்கத்தின் நேரடிப் பாதிப்புகளே ஆகும். அத்துடன், பொருட்களைச் சேர்ப்பதும், ஆடம்பரமாக வாழ்வதுமே வாழ்க்கையின் வெற்றி என்ற நுகர்வோர் கலாசாரம் நம்மிடம் இருந்த உன்னதமான எளிமையைப் பறித்து, மனிதர்களைப் பேராசை மற்றும் தீராத மன அழுத்தத்தை நோக்கியும் தள்ளியுள்ளது. மேற்கத்தேய நாடுகள் இன்று தங்களின் இந்தத் தீவிரப் பொருள்முதல்வாதப் போக்கினால் சலிப்படைந்து, மன அமைதிக்காகவும் வாழ்வியல் சமநிலைக்காகவும் யோகா, தியானம் மற்றும் கீழைத்தேய இந்து தத்துவங்களை நோக்கித் தீவிரமாகத் திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், நாமோ அவர்களின் வெளிப்பூச்சான ஆடம்பரங்களையும், கைவிடப்பட்ட கலாசாரக் கழிவுகளையும் நோக்கி ஓடிக்கொண்டிருப்பதுதான் இதில் உள்ள மிகப்பெரிய வரலாற்று முரண்பாடாகும்.
இறுதியாக, சுவாமி விவேகானந்தர் ஒருமுறை குறிப்பிட்டதைப் போல, மேற்கத்தேய நாடுகளின் அறிவியல் சிந்தனை, நிர்வாகத் திறன், கடின உழைப்பு மற்றும் நேர மேலாண்மை ஆகிய நேர்மறையான பண்புகளையும், நம்முடைய கீழைத்தேய ஆன்மீக, தார்மீக மற்றும் குடும்ப விழுமியங்களையும் சரியாக இணைப்பதே ஒரு உன்னதமான சமூகத்தை உருவாக்கும்.
எனும் சிந்தனைக்கு இணங்க, காலத்தின் ஓட்டத்தில் நம் சுய அடையாளத்தையும் வேர்களையும் அழித்துவிடாத ஒரு சமநிலையான வாழ்வியலே இன்றைய அவசரத் தேவையாகும். மேற்கத்தேயச் சிந்தனையில் உள்ள நேர்மறையான நவீனத்துவத்தையும், பெண்ணியச் சமத்துவத்தையும் நாம் தாராளமாக உள்வாங்கிக் கொள்வோம்.
அதே வேளையில், நம் பண்பாட்டின் ஆன்மாவாக விளங்கும் குடும்பக் கட்டமைப்பு, விருந்தோம்பல், பெரியோரை அரவணைத்தல் மற்றும் அறநெறி சார்ந்த வாழ்வியல் போன்ற உன்னதமான இந்து விழுமியங்களை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கக் கூடாது. நவீனத்துவத்தை நோக்கிப் பயணிப்போம், ஆனால் நம் சுய அடையாளத்தையும் பண்பாட்டு வேர்களையும் நெஞ்சில் தாங்கி நிற்போம். அதுவே நம் எதிர்காலச் சமூகத்தை ஆரோக்கியமான மற்றும் வழிகாட்டும் பாதையில் செலுத்தும் என்பதில் ஐயமில்லை.
மு.சாலினி
இந்து நாகரிகத்துறை, சிறப்பு கற்கை மாணவி,
நான்காம் வருடம்,
கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.
