*மொனராகலை பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்*
*கல்வி, காணி, அடிப்படை வசதிகள் தொடர்பில் விரைவான தீர்வுக்கு பணிப்புரை*
மொனராகலை மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், நேற்று(24/06/2026) குமாரவத்த, பறாவிலை, கும்புக்கன, முப்பனவெளி பிரதேசங்களில் வாழும் பெருந்தோட்ட மலையக மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார்.
மக்களின் அன்றாட பிரச்சினைகளை களத்தில் நின்று அறிந்துகொள்ளும் நோக்கில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, மக்கள் தமது நீண்டகால கோரிகைகளை நேரடியாக பிரதி அமைச்சரிடம் முன்வைத்தனர்.
*மக்கள் முன்வைத்த முக்கிய பிரச்சினைகள்:*
கல்வி தொடர்பான பிரச்சினைகள்
பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, பௌதீக வள பற்றாக்குறை, உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்ப பிரிவுகளை ஆரம்பித்தல், அறநெறி பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
*காணி மற்றும் வீடமைப்பு*:
பெருந்தோட்ட மக்கள் எதிர்கொளும் காணி உரிமை பிரச்சினைகள், அடிப்படை வசதிகளுடனான வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
கிராமிய வீதிகளை புனரமைத்தல் , சுத்தமான குடிநீர் வசதிகளைப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற அத்தியாவசிய தேவைகள் தொடர்பிலும்
அரச வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் பொழுது மொனராகலை பெருந்தோட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பிலும் மக்கள் தமது கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.
மக்கள் முன்வைத்த அனைத்து கோரிகைகளையும் பொறுமையாக கேட்டு அறிந்துகொண்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுதரும் நோக்கில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் சில பணிப்புரைகளையும் வழங்கினார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், “பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் இனி கோப்புகளில் முடங்காது. கல்வி, காணி, வீடு, வீதி, குடிநீர் என மக்கள் முன்வைத்த ஒவ்வொரு விடயத்திற்கும் காலஎல்லையுடன் கூடிய தீர்வு திட்டம் முன்னெடுக்கப்படும் . அதற்கான நடவடிகைகள் எமது அமைச்சின் ஊடாக தொடர்சியாக மேற்கொள்ளப்படும்” என உறுதியளித்தார்.
பெருந்தோட்டப்
பகுதி மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதுடன், அவர்களுக்கான சமூக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான இலக்கு எனவும் அவர் தெரிவித்தார்.
இதன் போது மொனராகலை பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பிரதேச மக்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
