தியத்தலாவையில் இன்று (27) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில், வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், அப்பகுதி மக்களும் அதிகாரிகளும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலைத் தகவல்களின்படி, காயமடைந்தவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
