ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கிளாஸ்கோவில் உள்ள ஸ்காட்ஸ்டவுன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ருமேஷ் தனது இரண்டாவது முயற்சியில் 89.75 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இந்தச் சிறப்பான வெற்றியைப் பெற்றுக்கொண்டார்.
இது பொதுநலவாய விளையாட்டுத் தொடரில் இலங்கை பெற்ற 6ஆவது தங்கப் பதக்கமாகும்.
2006ஆம் ஆண்டு பளுதூக்கும் வீரர் சிந்தன விதானகே தங்கப் பதக்கம் வென்றதற்குப் பிறகு, 20 ஆண்டுகள் கழித்து இலங்கை வெல்லும் முதலாவது தங்கப் பதக்கமும் இதுவாகும்.
