சவுதியில் இலங்கை இளைஞருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தல்!
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
அனோஜன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் கருத்துச் சுதந்திரம் சார்ந்தது என்பதால், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என அவ்வமைப்பு வெளியீடு ஒன்றில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தம்மாம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜன் மீது மற்றொரு கைதி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அவரது நிலைமையைக் கண்டறிய சவுதிக்கான இலங்கைத் தூதுவர் இன்று சிறைச்சாலைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மறுபுறம், அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சவுதி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இலங்கை பிரதிநிதிகள் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான மனு தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
