இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகக் கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபடும் அமைப்பொன்று இயங்கி வருவதாகப் பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அஸ்பெஸ்டாஸ் சீட்டுகள், சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களைச் சந்தை விலையை விட மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறி விளம்பரங்களை வெளியிடுவதே இந்த மோசடிக் கும்பலின் முதற்கட்ட நடவடிக்கையாகும்.
வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்தவுடன், மோசடிக்காரர்கள் அந்த வாடிக்கையாளர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு ஹார்ட்வேர் கடையைத் தொடர்புகொண்டு, குறிப்பிட்ட முகவரிக்கு பொருட்களை விநியோகிக்க ஏற்பாடு செய்கின்றனர்.
பொருட்கள் முகவரியைச் சென்றடைந்ததும், மோசடிக்காரர்கள் வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்குப் பணத்தை உடனடியாக வைப்புச் செய்ய வைக்கின்றனர்.
பொருட்களைக் கொண்டு வந்த சாரதியோ அல்லது கடை உரிமையாளரோ அதற்கான பணத்தைக் கேட்கும் போதே, தாம் ஏமாற்றப்பட்டதை வாடிக்கையாளர்கள் உணர்ந்து கொள்கின்றனர். இதனால் பணத்தையும் இழந்து, பொருட்களையும் பெற முடியாத நிலை ஏற்படுவதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, சமூக வலைத்தளங்கள் ஊடாகக் கட்டுமானப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். பொருட்கள் இடத்திற்கு வந்தடைந்தாலும் அவசரப்பட்டு ஆன்லைன் மூலம் பணத்தைச் செலுத்த வேண்டாம் என்றும், பொருட்களைக் கொண்டு வந்த நபரிடம் நேரடியாகப் பேசி உறுதிப்படுத்திய பின்னரே பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
