Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா வெற்றிகரமாக நிறைவுபெற்றமை பற்றி தெரிவிக்கும் ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

August 29, 2026

நேபாள வெள்ளப் பெருக்கில் பலி எண்ணிக்கை 579 ஆக உயர்வு! காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸார் தீவிர ஈடுபாடு!”

August 29, 2026

கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு!

August 29, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பூனாகலை, கபரகலை மண்சரிவினால் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாபுரம்” வீட்டுத் திட்டம் ஜனாதிபதியினால் மக்கள் பாவனைக்கு
இலங்கை

பூனாகலை, கபரகலை மண்சரிவினால் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாபுரம்” வீட்டுத் திட்டம் ஜனாதிபதியினால் மக்கள் பாவனைக்கு

ThanaBy ThanaAugust 29, 2026No Comments10 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பூனாகலை, கபரகலை மண்சரிவினால் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாபுரம்” வீட்டுத் திட்டம் ஜனாதிபதியினால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

இந்நாட்டில் பிறந்து, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்து, இப்பூமிக்கே மண்ணாகும் ஒவ்வொரு மனிதனுக்கும் சிறந்த வாழ்க்கையை உரித்தாக்கும் பொறுப்பு நிறைவேற்றப்படும்

– ஜனாதிபதி

4000 இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 163 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள்

இந்நாட்டில் பிறந்து, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்து, இப்பூமிக்கே மண்ணாகும் ஒவ்வொரு மனிதனுக்கும் சிறந்த வாழ்க்கையை உரித்தாக்கும் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளை இழந்து, சுமார் மூன்றரை ஆண்டு காலம் கடினமான மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்த பூனாகலை, கபரகலை பகுதியினைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாபுரம்” வீட்டுத் திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் இன்று (28) முற்பகல் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

மலையக மக்கள் எமது சகோதர மக்கள் என்ற வகையில் இந்நாட்டின் பூரண உரிமைகளையும் வாழ்க்கையையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பல நூற்றாண்டுகளாக அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை அவர்களின் பிள்ளைகளுக்கும் உரித்தாக்குவது நியாயமற்றது என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார். கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்யும்போது மலையக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரிவுகளை அந்த ஒப்பந்தங்களில் சேர்க்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு தெரிவித்தார்.

நமது நாட்டின் இதயமாகக் கருதப்படும் மத்திய மலைநாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான பொறுப்புகளை வகிக்கும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரங்களை ஒருங்கிணைத்து, முழுமையான அதிகாரங்களைக் கொண்ட மத்திய மலைநாட்டுப் பாதுகாப்பு அதிகாரசபையை அமைப்பதற்கான சட்டத்தை இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாக பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்த இந்தக் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடு, தமக்கென்று இடம் மற்றும் கௌரவமான வாழ்க்கையை உரித்தாக்கும் நோக்கத்துடன் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

10 பேர்சஸ் காணி மற்றும் 550 சதுர அடி பரப்பளவைக் கொண்ட முழுமையான 50 வீடுகள் இத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை, சமையலறை மற்றும் குளியலறை ஆகியவற்றைக் கொண்ட இந்த ஒவ்வொரு வீட்டின் செலவும் சுமார் 32 இலட்சம் ரூபாவாகும். அத்துடன், புதிய வீடுகளில் குடியேறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தளபாடங்கள், சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட சுமார் 175,000 ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பத்து பயனாளிகளுக்கு அடையாள ரீதியாக வீடுகளின் திறப்புகள் மற்றும் உரிமைப் பத்திரங்கள் வழங்குவது ஜனாதிபதி தலைமையில் இங்கு இடம்பெற்றது.

மேலும், 4000 இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை, பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் 163 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

“நவோதயாபுரம்” வீட்டுத் திட்டத்தை நிர்மாணிப்பதில் காணிகளை செப்பனிடுதல் முதல் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டுதல், வீடுகளை உறுதியாக நிர்மாணிக்கும் பணிகள் முடியும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இலங்கை இராணுவ பொறியியல் சேவைகள் படையணி வழங்கிய தீவிர மற்றும் சிறப்பான பங்களிப்பைக் பாராட்டி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.

வீட்டுப் பயனாளிக் குடும்பங்களின் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

இன்றைய தினம் இந்தப் பிரதேச மக்களுக்கு ஒரு விசேடமான ஒரு நாளாக அமையும் என நான் நினைக்கின்றேன். இருநூறு வருடங்களுக்கும் மேலாக எமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக வருகை தந்த இந்த மலையக மக்கள் எமது சொந்த இலங்கைச் சமூகத்தின் ஒரு அங்கமாவார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எப்போது வந்தார்கள் என்பது முக்கியமல்ல.அது வரலாறு.

ஆனால் இன்று எமது நாட்டில் பிறந்து, எமது நாட்டின் பொருளாதாரத்தில் பங்கெடுத்து, இந்த மண்ணில் பிணைந்து வாழும் இந்த மக்கள் எமது நாட்டின் விசேட உரிமைகளைக் கொண்ட ஒரு மக்களாவர். இருநூறு வருடங்களுக்கும் மேலான காலமாக, அவர்களுக்குத் சொந்தமாக ஒரு நிலத்துண்டு கூட இல்லாத, இந்தத் தாய்நாட்டில் உரிமையற்ற ஒரு சமூகமாகவே வாழ்கிறார்கள். தமக்கென்று ஒரு வீடு கூட இல்லாத மக்கள் அவர்கள்.எமது நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் குறைந்தபட்சம் ஐந்து அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாக வேண்டும் என நாங்கள் நினைக்கின்றோம்.வாழுவதற்கொரு வீடு, வருமான வழி, பிள்ளைகளுக்கான கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் மன அமைதி என்பன அவையாகும்.

ஆனால் நாம் இந்த மக்களிடம் கேட்டால், அவர்களின் முகங்களைப் பார்த்தால், அவர்களின் துன்பங்களுக்குச் செவிசாய்த்தால், இந்த ஐந்து விடயங்களில் எத்தனை விடயங்கள் பூர்த்தியாகியிருக்கின்றன?எனவே தற்போதைய எமது அரசாங்கத்தின் சவாலும், எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பும் என்னவென்றால், இந்த அனைத்து மக்களுக்கும் தேவையான அந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதே ஆகும்.அதற்காக நாங்கள் பல வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திலும் வீட்டுத் திட்டங்களை அமைப்பதற்கு முன்னுரிமை வழங்கிச் செயல்பட நாம் எதிர்பார்க்கின்றோம்.அதேபோன்று ஒரு சிறந்த வருமான வழியும் அவசியமாகிறது.அந்த வருமான வழிகளைப் பூர்த்தி செய்வதற்காக நாம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

ஏற்கெனவே இந்த மலையக மக்களுக்காக சம்பள உயர்வை வழங்குவதற்கு எம்மால் முடிந்துள்ளது.அது போதுமானது என நாம் நம்பவில்லை, இருப்பினும் ஆரம்ப முன்னெடுப்பை எடுத்து வைத்துள்ளோம்.

அதேபோன்று பிள்ளைகளின் கல்வி தொடர்பாகவும் நாம் பெருமளவில் கவனம் செலுத்தி வருகின்றோம்.பல தலைமுறைகளாக நீங்கள் வாழ்ந்த அந்த வாழ்க்கையை உங்களது பிள்ளைகளுக்கும் உரித்தாக்குவது நியாயமானதல்ல.

தோட்டத்தில் பிறக்கிறீர்கள், தோட்டத்தில் வேலை செய்கிறீர்கள், தோட்டத்தில் இறக்கிறீர்கள், தோட்டத்திலேயே மண்ணோடு கலக்கிறீர்கள்.அந்த வாழ்க்கையிலிருந்து நீங்கள் வெளியே வர வேண்டும்.அந்த வாழ்க்கையிலிருந்து வெளியேறுவதற்காக உள்ள மிக பிரதானமான வழி கல்வி மட்டுமே.எனவே இந்தப் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காக விசேட கவனம் செலுத்திச் செயல்படத் தயாராக உள்ளோம்.

அதேபோன்று ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை அமைப்பதற்காக சிறந்த சுகாதார வசதிகளை நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும். அது ஒரு அரசாங்கம் என்ற வகையில் எமது பொறுப்பாகும்.குறைந்த நிறையுடனான பிள்ளைப் பிறப்பு கொண்ட பிரதேசம் எது ? இந்த மக்கள் மத்தியிலேயே உள்ளனர்.ஐந்து வயதுக்குக் குறைந்த மந்தபோஷணையால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகள் அதிகளவில் எங்கே இருக்கிறார்கள்? இந்த மக்கள் மத்தியிலேயே உள்ளனர். ஆயுட்காலம் குறைவாக உள்ள மக்கள் எங்கே இருக்கிறார்கள்?இந்த மக்கள் மத்தியிலேயே இருக்கிறார்கள்.

எனவே இருநூறு வருடங்களுக்கும் மேலாக ஒதுக்கப்பட்ட, அவர்களைக் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்களால் இந்த மக்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.நாங்கள் உங்களை எமது சொந்த சகோதர மக்களாகக் கருதி, இந்நாட்டில் முழுமையான உரிமையையும், வாழ்வையும் பெற்றுத்தரச் செயல்படுவோம் என்பதை உறுதி கூறுகின்றேன்.

காணிகள் தொடர்பாகப் பெரியதொரு பிரச்சினை நிலவுவதை நான் அறிவேன்.தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு கம்பனிகள் இலகுவில் காணியை வழங்க தயாராக இல்லை.இருப்பினும் இந்த கம்பனிகளுடனான ஒப்பந்தங்கள் 2042 ஆம் ஆண்டளவில் நிறைவடையவுள்ளன.ஏற்கனவே அமைச்சு அந்த ஒப்பந்தங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காகக் குழுவொன்றை நியமித்து ஆராய்ந்து வருகின்றது.நாம் மிக விரைவாக அந்த ஒப்பந்தங்களை நிறைவுக்குக் கொண்டுவர எதிர்பார்க்கின்றோம்.ஆனால் அதில் முக்கியமான ஒரு சரத்து சேர்க்கப்படும்.

அதாவது, இந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சரத்துக்களை உள்ளடக்கியே அடுத்தகட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது குறித்து நாம் கவனம் செலுத்துவோம்.குறிப்பாக இந்த மத்திய மலைநாடு என்பது எமது நாட்டின் இதயமாகத் திகழ்கிறது. இந்த மத்திய மலைநாட்டில் இருந்து ஓடும் 103 ஆறுகள் காணப்படுகின்றன.எமது விவசாயத் துறை, எமது சூழல், எமது பொருளாதாரத்தின் மிகப்பெரிய பங்களிப்பு இந்த மத்திய மலைநாட்டில் இருந்தே பிறக்கின்றது. சுமாராக எமது நாட்டின் நிலப்பரப்பில் 13 சதவீதம் இந்த மத்திய மலைநாட்டில் அடங்கியுள்ளது.

வருடாந்த மழைவீழ்ச்சியில் 72 சதவீதம் இந்த மத்திய மலைநாட்டிற்கே கிடைக்கிறது.அதனால் எமது நாட்டின் மிகவும் முக்கியமான இதயம் இந்த மத்திய மலைநாடு.ஆனால் நீண்டகாலமாக முறையற்ற அபிவிருத்தியின் விளைவுகளை நாம் அனுபவித்து வருகின்றோம். பிரதான மண்சரிவுகள் 1,200 க்கும் அதிகமானவை ‘டித்வா’ புயலால் ஏற்பட்டுள்ளன என்று கடந்த கால அறிக்கைகள் காட்டுகின்றன. நாங்கள் பல தசாப்தங்களுக்கு முன்பு மண்சரிவுகளே ஏற்படாத ஒரு நாடு பற்றிப் பேசினோம். அதன் பின்னர் சில தசாப்தங்களுக்குப் பின்னர் ஒன்று அல்லது இரண்டு மண்சரிவுகள் பற்றிப் பேசினோம்.ஆனால் இப்போது ஆயிரக்கணக்கான மண்சரிவுகள் பற்றிப் பேசுகிறோம்.

அப்படியென்றால் இந்த மத்திய மலைநாட்டிற்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது? எமது கண்முன்னே இது அழிந்துகொண்டிருக்கின்றது.மலைச் சரிவுகள், ஊற்றுகள் வற்றிப் போதல், ஆறுகள் மற்றும் ஓடைகள் வறண்டு போதல், இருந்த பல்லுயிரினத் தன்மை அழிந்து போதல் எனப் பெரியதொரு அழிவை நாம் காண்கிறோம். இந்த அனைத்து அழிவுகளும் இப்போது எமது கண்முன்னே நடக்கின்றன.

எமது நாட்டின் பாதுகாப்பு, எமது நாட்டின் எதிர்காலம் என்பவற்றின் மிக முக்கியமான பொறுப்பை இந்த மத்திய மலைநாடு சுமக்கின்றது.அதனால்
நாம் ஏற்கனவே ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் விசேட சட்டமூலம் ஒன்றைச் தயாரித்து வருகிறோம்.அதாவது ‘மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை’ ஒன்றை அமைக்கவுள்ளோம்.பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்குப் பல தசாப்தங்கள் ஆகலாம்.ஆனால் அழிவை நோக்கிச் செல்லும் நடவடிக்கைகளை நாம் இப்போது நிறுத்த வேண்டும். அதுவே முதல் கட்டமாகும்.

ஏற்கனவே ஏற்பட்டுள்ள அழிவுகளைச் சீரமைக்க நீண்ட காலம் எடுக்கும்.ஆனால் முதல் கட்டமாக, இப்போது ஏற்படும் அழிவுகளை நிறுத்த வேண்டும்.அதற்காக திணைக்களங்கள், நிறுவனங்கள் எனப் பல பொறுப்புகள் உள்ளன.அந்த அதிகாரங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து, புதிய மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அந்தச் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிப் புதிய அதிகார சபையை அமைப்போம்.அந்த அதிகார சபைக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது, பல்லுயிரினப் பாதுகாப்பு, மண் பாதுகாப்பு, வனவளப்பகுதி பாதுகாப்பு, வனஜீவராசிகள் பாதுகாப்பு, நீர்ப்பாசனப் பாதுகாப்பு, விவசாயப் பாதுகாப்பு என அனைத்தையும் ஒரே அதிகார சபையின் கீழ் கொண்டுவந்து, மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம்.நாம் பிறக்கும்போது ஒரு வளமான மத்திய மலைநாடு பாதுகாக்கப்பட்டு இருந்தது.நாம் இறக்கும்போது எமது பிள்ளைகளுக்கு ஓர் அழிவுமிக்க மலைநாட்டையா விட்டுச் செல்ல வேண்டும்?எனவே, நாம் வாழும் காலத்தில் எமது பொறுப்பு என்னவென்றால், எமது எதிர்காலத்திற்காக இந்த மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதாகும்.

சில வேளைகளில் வீடுகள் இருக்கும் இடத்தை மாற்ற வேண்டியிருக்கலாம், விவசாய நிலங்கள் காடுகளாக மாற்ற நேரிடும். ஆனால் அதை நாம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எமது நாடு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனவே மத்திய மலைநாடு எமது இதயம், அதன் பாதுகாப்பு எமது நாட்டின் எதிர்காலம், அதற்காக நாம் தலையிட வேண்டும்.நிறுவனங்களின் அதிகாரங்கள் அங்குமிங்கும் மாறுவதைக் கண்டு யாரும் குழப்பமடைய வேண்டாம் பதவிகளில் மாறுதல்கள் ஏற்படுவதைக் கண்டு யாரும் குழப்பமடைய வேண்டாம்.பதவிகள் மாறுவதைக் கண்டு யாரும் கலக்கமடைய வேண்டாம்.ஒரு தேசியப் பொறுப்பாகக் கருதி நாம் இந்தப் பணியைச் செய்ய வேண்டும். இதில் பிரதானமான நோக்கம் எமது மலையக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.

அதற்காக இந்திய அரசாங்கம் நமக்கு நீண்டகால உதவிகளை வழங்கி வருகின்றது, அவர்களுக்கு நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.யுத்த காலத்தில் இலங்கையை விட்டு வெளியேறி இந்தியாவில் இருக்கும் மக்களுக்கு மீண்டும் இலங்கைக்கு வருவதற்குச் சில தடைகள் இருந்தன.அந்த அனைத்துத் தடைகளையும் நீக்குவதற்கு அண்மைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானித்தோம்.எமது குடியகல்வுத் திணைக்களம் அதற்குத் தேவையான உதவிகளை வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது, அவர்களும் எமது நாட்டுப் பிரஜைகள்.எனவே நமக்கு சாதகமான எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நாட்டில் பிறக்கும் மக்கள், நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் மக்கள், இந்த மண்ணில் உரமாகும் மக்கள் என அனைவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும். அந்த நல்ல வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்க பொறுப்பை அரசாங்கம் என்ற வகையில் நாம் ஏற்றுள்ளோம்.

எமது அமைச்சர் சமந்த வித்யாரத்ன, எமது பிரதி அமைச்சர், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், எமது வீடமைப்பு அமைச்சர் போன்றோர் இரவும் பகலும் உழைத்து வருகிறார்கள். உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர அவர்கள் செயல்படுகிறார்கள்.

உங்களுக்குச் சிறந்த வாழ்க்கையை வழங்குவதும், உங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதும், இந்நாட்டை மேலும் அழகான அரசாக மாற்றுவதுமே எமது எதிர்பார்ப்பு. அதற்காக உங்களது ஆதரவையும், தலையீட்டையும் எதிர்பார்க்கிறேன்” என்றும் தெரிவித்தார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன உரையாற்றுகையில்,

அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், எமது அமைச்சின் முதல் பணியாக இந்த வீட்டுத் திட்டத்தைத் தொடங்குவது குறித்து நாங்கள் கலந்துரையாடினோம். அதன்படி, தேவையான நிதியைத் திரட்டி, பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி, இந்த வீடுகளை விரைவாகவும் உயர் தரத்திலும் கட்டி முடிக்கும் பொறுப்பை பாதுகாப்புப் படைகளிடம் ஒப்படைத்தோம்.

அவ்வாறே, இன்னும் முடிக்கப்படாத வீட்டுத் திட்டங்களிலும் எமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. 2004 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் பல இடங்களில் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன. இந்த வீடுகளை நாங்கள் படிப்படியாக கட்டி வருகின்றோம். 22 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 2004 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சில வீட்டுத் திட்டங்கள், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இன்று கையளிக்கின்ற இந்த வீடுகளை மிகக் குறுகிய காலத்தில் உயர் தரத்துடன் கட்டி முடிக்க முடிந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த முயற்சியில் அயராது உழைத்த எமது இராணுவத் தோழர்களுக்கு நான் குறிப்பாக நன்றி கூறுகிறேன்.

மலையக மக்கள் இந்த நாட்டை வளமாக்குவதற்காகத் தங்கள் வியர்வையையும் கண்ணீரையும் சிந்தும் ஒரு சமூகம். அவர்கள் இந்த நாட்டின் தோட்டத் துறையில் பணியாற்றுகிறார்கள். கடந்த ஆண்டில் தேயிலை ஏற்றுமதி மூலம் நாம் 1.5 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டினோம்.

2023 ஆம் ஆண்டில், ஜனாதிபதி பதவியேற்பதற்கு முன்னர், மலையக மக்கள் இந்த நாட்டிற்கு வருகை தந்த 200 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஹட்டனுக்குச் சென்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஹட்டன் பிரகடனத்தை வெளியிட்டார். அங்கு, நமது அரசாங்கத்தின் கீழ், இந்த மக்களுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இன்று அதனை உணர்த்தும் அடையாளப்பூர்வமான ஒரு தருணம். இது வெறும் ஒரு வீடு மட்டுமல்ல, மக்களுக்கான பெருமை, உரிமைகள், பாதுகாப்பு மற்றும் வாழ்க்கையை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பு. அதனையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், கடந்த 10 வருடங்களில் இந்த பதுளை மாவட்டத்தில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 734 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன. ஆனால், நமது அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. இந்த பதுளை மாவட்டத்தில் 4,000 ற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான பணிகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டோம். இந்திய உதவித் திட்டத்தின் கீழ் 10,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதற்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றி கூறுகின்றோம்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறியதாவது,

இன்றையநாள் மலையகத்துக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் மகிழ்ச்சியான நாளாகும். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மலையக உறவுகளுக்கு நமது ஜனாதிபதி அவர்களின் கரங்களால் வீடுகளை கையளிக்கும் மகிழ்ச்சிகரமான நாள் இது. எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மலையக மக்கள் அதிகமாக நம்புகின்றார்கள். 200 வருடங்களுக்கு மேல் காலம் காலமாக ஏமாற்றபட்ட ஒரு சமூகம் இந்த மலையக சமூகம். 2024 ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழல் நமது மக்களுக்கு நல்லதொரு மாற்றத்திற்கு வழியமைத்தது. அதன் பிரதிபலிப்பாக நாம் ஹட்டன் பிரகடனத்தில் சொல்லப்பட்ட விடயங்களை நிறைவேற்றி வருகின்றோம். அதன்படி சம்பள உயர்வுகளை வழங்கி வருகின்றோம். போராட்டமில்லை , ஆர்ப்பாட்டமில்லை, உண்ணாவிரதமில்லை அத்தகைய நிலையிலும் மலையக மக்களுக்கான சம்பள உயர்வை நாம் வழங்கியுள்ளோம்.

இதன் தொடர்ச்சியாக இன்று இங்கு கட்டப்பட்டுள்ள 397 வீடுகளும் அரச செலவில் கட்டப்பட்ட வீடுகளாகும். இது ஆரம்பம் மாத்திரமே, இனி இந்த பயணம் முழு மலையகமெங்கும் தொடர்ச்சியாக செல்லும். ஒவ்வொரு குடிமகனுக்கும் காணி உரிமையுடனான வீடு வழங்கப்படும் என்ற தேசிய மக்கள் சக்தியின் உறுதிமொழியை நிச்சயம் நிறைவேற்றுவோம். எங்களுடைய கல்வி,சுகாதாரம்,பொருளாதாரம் ஆகிய எல்லாத் துறைகளிலும் மலையக மக்களை மேம்படுத்த நமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மலையக சமூகம் பற்றிய ஒரு கவிதையில், தேயிலை தோட்டத்திலே பிறந்தோம், தேயிலை தோட்டத்திலே வளர்ந்தோம், ஆவி பிரியும் வேளையிலும் அந்த தேயிலை செடியின் அடியிலேயே வீழ்ந்தோம். இனியென்ன, அநுரகுமாரவின் ஆட்சிக்காலத்திலே மலையக மக்களுக்கான மகிழ்ச்சி தொடரும். அவ்வாறு அந்த கவிதை அமைந்துள்ளது. ஜனாதிபதி அநுர குமாரவின் ஆட்சியில் லயன் வாழ்க்கையை துடைத்தெறிவோம்.சொந்த காணிகளிலேயே வீடு கட்டுவோம். பாட்டன் சிந்திய ரத்தத்திற்கு சொந்த மண்ணில் பதில் சொல்வோம். இனி மலையக மக்களுக்கு எல்லாமே சுபமாகவே அமையும்” என்று குறிப்பிட்டார்.

மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இளைஞர் விவகாரங்கள் பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி ஜே. எம். கபில ஜயசேகர ஆகியோருடன், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, பதுளை மாவட்டச் செயலாளர் சுனில் கலகம உட்பட அரச அதிகாரிகள், பதில் இந்திய உயர்ஸ்தானிகர் Maitrey Kulkarni உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள், பெருமளவிலான பிரதேச மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-08-28

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா வெற்றிகரமாக நிறைவுபெற்றமை பற்றி தெரிவிக்கும் ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

    August 29, 2026

    கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு!

    August 29, 2026

    தோட்ட காட்டான்

    August 29, 2026

    மலையக மக்களின் 200 ஆண்டுகால துயரத்திற்கு தீர்வு: சொந்தக் காணியில் வீடுகள் வழங்கி புதிய வரலாறு!*

    August 28, 2026
    Editors Picks

    கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா வெற்றிகரமாக நிறைவுபெற்றமை பற்றி தெரிவிக்கும் ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

    August 29, 2026

    நேபாள வெள்ளப் பெருக்கில் பலி எண்ணிக்கை 579 ஆக உயர்வு! காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸார் தீவிர ஈடுபாடு!”

    August 29, 2026

    கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு!

    August 29, 2026

    தோட்ட காட்டான்

    August 29, 2026

    கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா வெற்றிகரமாக நிறைவுபெற்றமை பற்றி தெரிவிக்கும் ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

    August 29, 2026

    நேபாள வெள்ளப் பெருக்கில் பலி எண்ணிக்கை 579 ஆக உயர்வு! காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸார் தீவிர ஈடுபாடு!”

    August 29, 2026

    கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு!

    August 29, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.