கொழும்பு துறைமுகத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின்போது, கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 463 கிலோகிராம் எடையுடைய கிரிஸ்டல் மெதம்பேட்டமைன் எனப்படும் ‘ஐஸ்’ போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான தொடர் விசாரணைகளின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் இன்று அதிகாலை கொழும்பிலுள்ள விடுதியொன்றில் வைத்து விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இரு பாகிஸ்தான் நாட்டவர்கள் உட்பட மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துறைமுகத்திற்கு வருகை தந்த கொள்கலன்களில் துண்டுகளுக்கு நடுவே மறைத்து வைத்து இந்நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற இந்த போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் இலங்கைச் சுங்கப் திணைக்களம் ஆகியவை இணைந்து இச்சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதோடு, இந்த சர்வதேச கடத்தல் பின்னணியில் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கண்டறியும் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
