நுகர்வோர் செலுத்தும் பணத்திற்குச் சரியான எடையுள்ள பாண் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, எடை குறைந்த பாண் மற்றும் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதிலுமுள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் உட்பட நூற்று பதினெட்டு நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது, ஐம்பத்து நான்கு நிறுவனங்களில் எடை குறைந்த பாண் கண்டறியப்பட்டுள்ளதுடன், எழுபத்தாறு நிறுவனங்களில் பாணின் எடை சரியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதும், அறுபத்தைந்து நிறுவனங்களில் பாணின் விலையும் சரியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒரு முழுப் பாண் நானூற்று ஐம்பது கிராமும், அரைப் பாண் இருநூற்று இருபத்து ஐந்து கிராமும் கொண்டிருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
பாணின் எடை, விலை அல்லது ஏதேனும் வர்த்தக முறைகேடுகள் தொடர்பாகப் புகார்கள் இருந்தால், அலுவலக நேரங்களில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தேழு என்ற நுகர்வோர் உடனடி அழைப்பு இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
