பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 20 ஆண்டு கால EPF மற்றும் ETF நிலுவைத்தொகை: ரூ. 4,500 மில்லியனை வழங்க நடவடிக்கை!
இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் எல்கடுவ தோட்ட நிறுவனம் ஆகிய மூன்று அரச தோட்ட நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியாற்றி வரும் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செலுத்தப்படாமலிருந்த ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) சார்ந்த 4,500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சட்டரீதியான நிலுவைத் தொகையை விரைவாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய பெருந்தோட்ட மக்கள் ஓய்வுபெற்ற பின்னரும், முதிய வயதிலும் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார மற்றும் சுகாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் முதன்மை தலையீட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதற்கமைய, குறித்த நிதியானது பின்வரும் நிறுவன ஊழியர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது:
* இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SLSPC): 3,000 ஊழியர்களுக்கு 1,961 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை.
* மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை (JEDB): 6,123 ஊழியர்களுக்கு 2,024 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை.
* எல்கடுவ தோட்ட நிறுவனம் (Elkaduwa Plantations): 1,000 ஊழியர்களுக்கு 503 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக, குறிப்பாக மலையகத் தோட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்கும் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 10 ஆம் திகதி கண்டி மாவட்ட செயலகத்தில், தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தொழில் அமைச்சர் அணில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருடன் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.

