சபரகமுவ மாகாண ஆசிரியர் ஆராய்ச்சி மாநாட்டிற்கு 50 ஆசிரியர்கள் தெரிவு- முதல் செயலமர்வு இம்மாதம் 17, 18 ஆம் திகதிகளில்
(எம்.எல்.எஸ். முஹம்மத், இரத்தினபுரி)
சபரகமுவ மாகாண தமிழ் மொழிமூலப் பாடசாலைகளின் கற்றல்-கற்பித்தல் தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன், சபரகமுவ மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “சபரகமுவ மாகாண ஆசிரியர் ஆராய்ச்சி மாநாடு 2026/2027” வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களில் பங்கேற்பதற்காக, முதற்கட்டமாக 50 பயிலுநர் ஆசிரியர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான முதலாவது ஆராய்ச்சி வழிகாட்டல் இரண்டு நாள் வதிவிடச் செயலமர்வு, இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் அட்லுகம கல்வி அபிவிருத்தி மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளதாக சபரகமுவ மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி ஹுஸ்னா ஸஜான் தெரிவித்தார்.
பாடசாலைகளில் காணப்படும் கற்றல் கற்பித்தல் சவால்கள் மற்றும் கல்வித் தர அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளுக்கு, செயல்முறை ஆராய்ச்சி முறையியல்கள் ஊடாகப் புதிய தீர்வுகளை அறிமுகப்படுத்தும் நோக்குடன் இச்செயலமர்வு நடத்தப்படுகின்றது.
இதன்போது ஆராய்ச்சி பற்றிய அறிமுகம், ஆராய்ச்சி முன்மொழிவு தயாரிப்பு மற்றும் ஆய்வுக் கட்டுரை எழுதுதல் தொடர்பான முழுமையான வழிகாட்டல்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகப் மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஹுஸ்னா மேலும் தெரிவித்தார்.
தேசிய கல்வி நிறுவனத்தின் மீப்பே நிலைய கல்வி நிர்வாகம் மற்றும் அபிவிருத்தித் துறை பணிப்பாளர் கலாநிதி எஸ். கருணாகரனின் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி இரண்டு நாள் செயலமர்வில், ஆராய்ச்சி வழிகாட்டல் வளவாளர்களாகப் பேராதனை தேசிய கல்விக் கல்லூரி விரிவுரையாளர் திரு. எஸ். ஜோன்ராஜ், ஸ்ரீபாத தேசிய கல்விக் கல்லூரி விரிவுரையாளர் திரு. எல். சிவக்குமார் மற்றும் பலாங்கொடை ஆசிரியர் தொழில் வாண்மைத்துவ அபிவிருத்தி மத்திய நிலையத்தின் விரிவுரையாளர் திரு. எஸ். பிரேம்குமார் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆசிரியர் ஆராய்ச்சி மாநாட்டு வேலைத்திட்டம், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் இறுதி வாரம் வரை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்படி ஆராய்ச்சி வழிகாட்டல் செயலமர்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து பெறப்படும் 10 சிறந்த ஆய்வுக் கட்டுரைகள், அடுத்த வருடம் நடைபெறவுள்ள சபரகமுவ மாகாண ஆசிரியர் ஆராய்ச்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், மாநாட்டு ஆராய்ச்சி சஞ்சிகையில் பிரசுரிப்பதற்கான ஏற்பாடுகள் உட்பட, சிறந்த ஆசிரியர் ஆராய்ச்சி விருதுகளுக்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாகப் மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி ஹுஸ்னா ஸஜான் தொடர்ந்தும் தெரிவித்தார்.
