புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று (17) பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
பாதிப்புக்குள்ளான 42 வயதுடைய குறித்த தொழிலாளி, உடனடியாக வகுவப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காகக் கம்பளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கலுகல்ல தோட்டத்தில் சில வாரங்களுக்கு முன்னரும் பாம்புக்கடிக்கு இலக்கான பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோட்டப் பகுதிகள் காடடர்ந்து காணப்படுவதாகவும், அவற்றை முறையாகப் பராமரிப்பதற்குத் தோட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, தோட்டங்களை காடாக்க விடாமல் முறையாக பராமரிக்குமாறும், தமது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
