2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் இறுதித் தீர்ப்பை, கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் (22) அறிவித்துள்ளது.
நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகியோர் அடங்கிய குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேவேளை, போதிய சாட்சியங்கள் இன்மையால் 9 பேர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை, இனவாதக் கருத்துகளைப் பரப்பியமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் 8,900 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
269 பேர் உயிரிழந்து, 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இத்தாக்குதல் வழக்கில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் 17ஆவது சந்தேகநபரான யாசிம் பாவா அப்துல் ரவூப் விசாரணைகளின் போது உயிரிழந்துள்ளார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முகமாகப் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், மோப்ப நாய்கள் மற்றும் நடமாடும் சிசிடிவி வாகனங்கள் அடங்கிய பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
