மாத்தளை கலைமகள் கல்லூரியில் மாபெரும் சிறுவர் சந்தை: மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தொழில்முயற்சி திறன்கள் மிளிர்ப்பு!
மாத்தளை கல்வி வலையத்திற்குட்பட்ட கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில், மாணவர்களின் தொழில்முயற்சி, படைப்பாற்றல், தலைமைத்துவம் மற்றும் நடைமுறைப் பொருளாதார அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சிறுவர் சந்தை சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை பதில் அதிபர் உதயகுமார் அவர்களின் தலைமையில், உதவி அதிபர் அழகர் அவர்களின் பங்கேற்போடு பாடசாலையின் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களால் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இச்சந்தையில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று உணவுப் பொருட்கள், சிற்றுண்டிகள், இனிப்பு வகைகள், பழவகைகள், குளிர்பானங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் அடங்கிய பல்வேறு விற்பனைச் சாவடிகளை அமைத்திருந்தனர்.
பொருட்களைத் தயாரிப்பது முதல் விலையை நிர்ணயித்தல், வாடிக்கையாளர்களை உபசரித்தல் மற்றும் வரவு-செலவுகளைப் பதிவிடுவது வரை அனைத்துச் செயற்பாடுகளையும் மாணவர்களே முன்னெடுத்தனர். இதன்மூலம் வகுப்பறை அறிவை நடைமுறையில் செயல்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.
இந்நிகழ்வில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் திரளாகக் கலந்துகொண்டு மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி ஊக்கப்படுத்தினர்.
கல்வி என்பது ஏட்டுச்சுரையோடு நின்றுவிடாமல், வாழ்க்கைத்திறனையும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையும் வளர்ப்பதாக அமைய வேண்டும் என்பதற்கு இச்சிறுவர் சந்தை சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்ததாகப் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
தீபன்ராஜ்

