22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த மாற்றம் எவ்வாறு, எந்த நடைமுறையின் ஊடாக கொண்டுவரப்படுகின்றது என்பதில்தான் தமது கேள்வி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது எனக் குறிப்பிட்ட அவர், உள்கட்டமைப்பு வசதிகளையும் இணையாக மேம்படுத்த வேண்டும் என்றார்.
அரசாங்கங்கள் மாறும்போதெல்லாம் நீதித்துறையில் மாற்றங்களைச் செய்வது அதன் சுயாதீனத்தையும் மக்கள் நம்பிக்கையையும் பாதிக்கும் என்றும், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நீதித்துறை எப்போதும் நிலைத்தன்மையுடன் இயங்க வேண்டும் என்றும் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
