சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நாட்டின் பெறுமதிமிக்க பொக்கிஷம்
“சிறுவர்கள் என்பவர்கள் நாட்டின் பெறுமதிமிக்க பொக்கிஷமாவர். அவர்களின் உடல் மற்றும் உள நல்வாழ்வைப் பாதுகாத்து, முறையான வளர்ச்சிக்குத் தேவையான சூழலை உருவாக்குவது ஒரு அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகும். சிறுவர்களின் கற்பனைத் திறன், எதிர்பார்ப்புகள் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை நாளைய நாட்டின் போக்கை தீர்மானிக்கின்றன.
நாம் கட்டியெழுப்பும் நாடானது, நாளைய தினம் அவர்களிடம் கையளிக்கப்படும் நாடாக மட்டுமன்றி, இன்று அவர்களின் கனவுகளுக்கு இடமளிக்கும், அவர்களின் குரலுக்குச் செவிமடுக்கும் மற்றும் அவர்களின் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் நாடாகவும் அமைய வேண்டும்.
சமமான கல்வி உரிமையும் மறுசீரமைப்பும்
சாதி, மதம், பொருளாதார நிலை, புவியியல் பின்னணி அல்லது வேறு எந்தக் காரணமும் எந்தவொரு சிறுவனின் கல்விக்கும் சீரான வளர்ச்சிக்கும் தடையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு பிள்ளையும் தனது திறமைகளை வெளிக்கொணர்ந்து, கனவுகளை அடைவதற்குச் சமமான மற்றும் நியாயமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.
இதற்காக, நாட்டின் கல்வியை ஒரு புதிய மாற்றத்திற்கு உட்படுத்தி, பெற்றோருக்குச் சுமையாகவும் பிள்ளைகளுக்குத் துன்பமாகவும் இல்லாத, நவீன உலகிற்குப் பொருத்தமான திறன் அடிப்படையிலான கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டை நாம் ஏற்கனவே தொடங்கியுள்ளோம்.
பொருளாதார ஸ்திரத்தன்மையும் போதைப்பொருள் ஒழிப்பும்
கல்விக்கான புலமைப்பரிசில்களை விரிவுபடுத்துவது முதல், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பராமரிப்புத் தேவைப்படும் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது வரை அனைத்துத் திட்டங்களின் நோக்கமும், நாட்டின் பிள்ளைகளுக்குப் பெருமைமிக்க நாளைய தினத்தை உருவாக்குவதேயாகும்.
நிலையான பொருளாதாரத்தின் மூலம் பாதுகாப்பான சிறுவர் பருவத்தை அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், போதைப்பொருளிலிருந்து இளம் சந்ததியைப் பாதுகாப்பதற்காக ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் தின வாரத்தைப் பிரகடனப்படுத்தி, மகளீர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு அர்த்தமுள்ள நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது” என ஜனாதிபதி தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
