கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் இன்று (13) பிற்பகல் 2:15 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக வீடுகள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளன.
இத்தீ விபத்தில் அப்பகுதியிலிருந்த சுமார் 21 தற்காலிக வீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காகச் சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததுடன், தற்போது தீப்பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் பெருமளவிலான சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்களோ அல்லது எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார். தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இதற்கிடையில், தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களையும் நிலவும் சூழ்நிலையையும் பார்வையிடுவதற்காகக் கொழும்பு மாநகரசபை மேயர் வ்ராய் கெலீ பல்தசார் சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்திருந்தார்.
