இலங்கைக்கு அருகில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் காரணமாக, இன்று மாலை முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில், 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வட மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினம் காலையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் மூடுபனி நிலை காணப்படலாம் என்பதால், வாகன ஓட்டிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்க்க, பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
