நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று இரவு 10 மணி வரை அமுலில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கண்டி மாவட்டத்தின் உடபலாத்த, மெததும்பறை, குண்டசாலை, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலப்பாத, குருவிட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் பொதுமக்கள் அதிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மண்சரிவு மற்றும் பாறைச் சரிவு அபாயம் நிலவுவதால், அப்பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வாகன சாரதிகளும் அவதானமாகச் செயற்படுமாறும், அவசர காலங்களில் பாதுகாப்பான இடங்களை நாடுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
