மலையக வரலாற்றில் மிகப்பெரிய சோகமாகப் பதிவான பதுளை மாவட்டம், கொஸ்லந்தை – மீரியபெத்த பாரிய மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் (29) 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனினும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒரு பகுதியினருக்கு இதுவரை நிரந்தர வீடமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட திடீர் மண்சரிவு காரணமாகப் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தையும் இருப்பிடங்களையும் இழந்து நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டன.
இந்நிலையில், அனர்த்தத்தின் 12ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டுத் தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று (29) ஹப்புத்தளை நகரில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த ஏற்பாட்டாளர்கள், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே இதுவரை நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். எஞ்சியுள்ள பல குடும்பங்கள் தமக்கான வீடமைப்பு வசதிகள் இன்றி இன்னமும் அனர்த்தத்தின் வடுவோடு தவித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர்கள், மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வரும் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது குரலெழுப்பினர்.
