மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்தினால் நடத்தப்பட்ட நூலகங்களுக்கிடையில் மாகாண மட்ட போட்டி நிகழ்வில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் மத்திய மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மாவட்ட மட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில் குண்டசாலை பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் 31.10.2026 அன்று மாகாண மட்ட போட்டிகள் இடம்பெற்றது. அப் போட்டிகளில் நடுவர்களினால் வெளியிடப்பட்ட முடிவுகள், முடிவுகளை வெளியிட்ட முறைமைகள் தொடர்பிலான திருப்தியற்ற நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு அம் முடிவுகளை ரத்து செய்து போட்டி நிகழ்வுகளை மீளவும் நடத்தக் கோரியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந் நிலைமைத் தொடர்பில் பின்வரும் குற்றச்சாட்டுக்கள் முன்வைவைக்கப்பட்டுள்ளது.
1. நடுவர்கள் போட்டிகளின் போது வேறு வேறாக புள்ளிகளை பதிவு செய்து அப் பதிவுகளை காரியாலயத்திற்கு அனுப்பி வைப்பதும், பின்னர் அப் பதிவுகளை பிரதான நடுவர் குழு பதிந்து அதனில் இருந்தே முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டியதே நியமம் ஆகும். இவ்வாறான அனுகுமுறை எந்தவொரு போட்டிகளுக்கும் பின்பற்றப்படவில்லை எனபது கவனத்திற்குரியதாகும்.
2. கடமையில் இருந்த நடுவர்கள் ஒருவருக்கொருவர் மிக அருகில் அமர்ந்தும், கலந்துரையாடியும் புள்ளியிட்டார்கள். புள்ளிகள் வழங்கப்பட்ட ஆவணத்தை காரியாலயத்திற்கு அனுப்பவில்லை. நடுவர்களால் இடப்பட்ட புள்ளிகளை பரீட்சிக்கும் எந்தவொரு நடைமுறையும் இருக்கவில்லை. உதாரணமாக இருபது வயதிற்கு மேற்பட்டவிவாத போட்டியாளர்களுக்கான முடிவுகளை அறிவிப்பதற்காக நடுவர்கள் மூவரும் இணைந்து அரை மணித்தியாலம் கலந்துரையாடியுள்ளார்கள். போட்டியாளர்களை போட்டி இடம்பெற்ற இடத்தில் இருந்து அப்புரப்படுத்திய நிலையிலேயே இக் கலந்துரையாடல் இடம்பெற்றறுள்ளது. போட்டி முடிவை அறிவித்ததன் பின்னர் முடிவுக்கான பொருத்தமானதும் நியாயமானதுமான காரணங்களை, தெளிவுறுத்துமாறு கோரிக்கை விடுத்த போதிலும், எதுவித பொருத்தமான காரணங்களையும் முன்வைக்காது அவ் இடத்தில் இருந்து நடுவர்கள் வெளிநடப்பு செய்தார்கள். அத்தோடு அவர்களின் பதில்கள் இத்துறையில் இருக்க வேண்டிய ஆளுமைப்பண்புகளை வெளிக்காட்டவில்லை என்பதும் கவலைக்குரியதாகும்.
3. நடுவர்களின் இத்துறைசார் அனுபவம் இன்மையும், அவர்களது அகவயத்தன்மையும், முடிவுகளை தீர்மானித்து வெளியிடும் முறைமையில் இருந்த குறைபாடுகளும் அவதானத்திற்குரியனவாகும்.
தமிழ், சிங்கள மொழிமூல போட்டி களங்களிலும் இவ்வாறான அசாதாரண நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாதிக்கப்பட்வர்களுக்கு நியாயத்தை ஏற்படுத்தும் முனைப்பில்ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆளுநரின் செயலாளருக்கு பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி தொடர்பின் மூலம் அறிவித்துள்ளார்கள். இவ் விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி ஆளுநருக்கு மின்னஞ்சல் ஊடாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இக் கடிதத்தின் பிரதிகளை மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், கண்டி மாவட்ட உதவி உள்ளுராட்சி உதவி ஆணையாளர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அக் கடிதத்தில் பின்வரும் விடயங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
1. வருடாந்த செயற்பாடு, இதனை எப்படியாவது நிறைவு செய்து விட்டால் சரி என்ற மனநிலையில் இருந்து விடுபட்டு உணர்வுபூர்வமாக பங்கேற்கும் மனநிலையினை தோற்றுவித்தல்.
2. அசாதாரண நிலைமை ஏற்பட்ட போட்டி நிகழ்வுகளை மீளவும் நடத்துதல், அவ்வாறு நடத்தப்படும் போது நமது மாகாணத்தில் இல்லாது, ஏனைய மாகாணங்களில் இருந்து சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபாடும் அனுபவமும் கொண்ட நடுவர்களை அழைத்து போட்டிகளை நடத்துவது சிறந்தது. (எப்படியும் போட்டியை நடத்தி முடித்து விட வேண்டும் என்ற மனநிலையிலேயே கண்டிக்கு அருகிலுள்ள் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களை மாத்திரம் (அன்றைய தினம் ஓய்வில் இருப்பவர்களை அழைக்கும் வழமையே காணப்படுகிறது) நடுவர்களாக நியமிப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
இவ் விடயங்களை கவனத்தில் கொண்டு 20 வயதுக்கு மேற்பட்ட விவாத போட்டி உட்பட்ட சிக்கலான நிலைக்குரிய போட்டிகளை மீளவும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டடுள்ளது. அதிகாரிகளின் அசமந்த போக்கினால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கையினை நாமும் வன்மையாக கண்டிக்கிறோம். நமது மாகாணத்தின் நூலக செயற்பாடுகள் தங்களின் வழிநடத்தலில் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்.
