கொஸ்லந்தை பகுதியில் சுரங்கத்திற்குள் சிக்கி இளம் குடும்பஸ்தர் பலி!
கொஸ்லந்தை ஊவா மாவெலகம பகுதியில் அமைந்துள்ள சுரங்கம் ஒன்றிற்குள் சிக்கிக்கொண்ட நபர் ஒருவர் நேற்று (31) இரவு உயிரிழந்துள்ளதாக கொஸ்லந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஊவா மாவெலகம, கொஸ்லந்தை முகவரியைச் சேர்ந்த ஆர். தினேஷ் என்ற 28 வயதுடைய திருமணமான நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நபர் நேற்று (31) பிற்பகல் தனது உறவினர் ஒருவருடன் தியஹிட்டித்தென்ன பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு வனவிலங்கு கண்டுள்ளார்
இதனையடுத்து, அந்த வனவிலங்கை பின் தொடர்ந்து சென்ற போது அது காட்டுப் பகுதியில் அமைந்திருந்த சுரங்கம் ஒன்றிற்குள் நுழைந்துள்ளது.
இதன்போது, அதனைப் பிடிப்பதற்காக உயிரிழந்த நபரும் அந்தச் சுரங்கத்திற்குள் நுழைந்துள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் சுரங்கத்திற்குள் இருந்த பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்து, அவரது இடுப்புப் பகுதியின் மீது விழுந்து அழுத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, சம்பவ இடத்தை பொலிஸ் விசேட குற்றத்தடயவியல் பிரிவினர் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளனர்.
மேலும், கொஸ்லந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஓசத சிந்தக சுபசிங்க அவர்களின் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
